கிரிக்கெட்
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி பெற 160 ரன்களை இலக்காக வைத்தது இங்கிலாந்து அணி

மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற 160 ரன்களை இலக்காக இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்துள்ளது. #IndVsEng
மான்செஸ்டர், 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்து அணியுடன் 3 இருபது ஓவர் போட்டி, 3 ஒரு நாள் போட்டி மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி அங்கு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டது. இந்நிலையில் இரு அணிகளும் மோதும் முதல் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் தொடங்கியது.   

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இங்கிலாந்து அணியை பேட்டிங் செய்யுமாறு பணித்தார். அதன்படி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாசன் ரோய் மற்றும் ஜோஷ் பட்லர் ஆகியோர் களமிறங்கினர். ஆரம்பத்திலிருந்தே அதிரடி காட்டிய இந்த ஜோடி 4-வது ஓவரின் இறுதிப்பந்தில் பிரிந்தது. உமேஷ் யாதவ் வீசிய பந்தை அடித்து ஆட நினைத்த ஜாசன் ரோய் (30 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேறினார். அடுத்ததாக அலெக்ஸ் ஹாலெஸ், பட்லருடன் இணைந்தார்.

இருவரும் சற்று நிதானமான ஆட்டத்தையே வெளிபடுத்த இங்கிலாந்து அணி 10 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை சேர்த்தது. இந்நிலையில் 11.3-வது ஓவரில் குல்தீப் வீசிய சுழற்பந்தில் ஹாலெஸ் (8 ரன்கள்) போல்ட் ஆகி வெளியேற அடுத்ததாக இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் களம் கண்டார். இதனிடையே 13வது ஓவரை வீசிய குல்தீப், தனது அபார பந்து வீச்சினால் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதற்கு பின் களமிறங்கிய வீரர்களும் மந்தமான ஆட்டத்தையே வெளிபடுத்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை சேர்த்தது. இந்திய அணி தரப்பில் குல்தீப் 5 விக்கெட்டுகளையும், உமேஷ் 2 விக்கெட்டுகளையும், ஹர்திக் பாண்டியா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இங்கிலாந்து அணி தரப்பில் அதிகபட்சமாக பட்லர் 69 ரன்களை சேர்த்தார்.

இதனிடையே 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடி வருகிறது.