ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 172 ரன்கள் குவித்து சாதனை

ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 172 ரன்கள் குவித்து, தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.

Update: 2018-07-03 21:30 GMT

ஹராரே,

ஜிம்பாப்வேக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் 172 ரன்கள் குவித்து, தனது முந்தைய உலக சாதனையை முறியடித்தார்.

முதல் விக்கெட்டுக்கு 223 ரன்கள்

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய மூன்று நாடுகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஹராரே நகரில் நேற்று நடந்த 3–வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா–ஜிம்பாப்வே அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த ஜிம்பாப்வே முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ஆரோன் பிஞ்சும், டார்சி ஷார்ட்டும் களம் புகுந்தனர். ஜிம்பாப்வேயின் பந்து வீச்சை நொறுக்கியெடுத்த ஆரோன் பிஞ்ச் ரன்மழை பொழிந்தார். சிக்சரும், பவுண்டரியுமாக விரட்டியடித்த அவரை கட்டுப்படுத்த ஜிம்பாப்வே கேப்டன் மசகட்சா 7 பவுலர்களை பயன்படுத்தி பார்த்தும் பலன் இல்லை. அவருக்கு டார்சி ஷார்ட் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். பல சாதனைகளை படைத்த பிஞ்ச்– டார்சி ஷார்ட் ஜோடி கடைசி ஓவரில் தான் பிரிந்தது. டார்சி ஷார்ட் 46 ரன்களில் (42 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) கேட்ச் ஆனார். இவர்கள் முதல் விக்கெட்டுக்கு 223 ரன்கள் திரட்டி புதிய உலக சாதனை படைத்தனர். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரு விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில்–வில்லியம்சன் ஜோடி 2016–ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

பிஞ்ச் 172 ரன்கள்

31 வயதான ஆரோன் பிஞ்ச் இரண்டு பந்துகள் எஞ்சிய இருந்த போது, வேகப்பந்து வீச்சாளர் முஜாரபானி வைடாக வீசிய பந்தை விளாச முயற்சித்து ஆப்–ஸ்டம்பை அடித்து ‘ஹிட்விக்கெட்’ ஆகிப்போனார். ஆரோன் பிஞ்ச் 172 ரன்களில் (76 பந்து, 16 பவுண்டரி, 10 சிக்சர்) வெளியேறினார். சர்வதேச 20 ஓவர் போட்டியில் ஒரு வீரரின் அதிகபட்ச ரன் இது தான். முந்தைய உலக சாதனையும் அவரது வசமே இருந்தது. 2013–ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 156 ரன்கள் எடுத்திருந்தார். அந்த சாதனையை இப்போது திருத்தி எழுதியுள்ளார். இன்னும் ஒரு பவுண்டரி ஓடவிட்டிருந்தால் எல்லாவகையான 20 ஓவர் கிரிக்கெட்டிலும் அதிகபட்ச ரன்களை எட்டியிருப்பார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ஆடிய கிறிஸ் கெய்ல் 2013–ம் ஆண்டு புனே வாரியர்சுக்கு எதிராக 175 ரன்கள் சேர்த்ததே ஒட்டுமொத்த 20 ஓவர் கிரிக்கெட்டில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோராக நீடிக்கிறது.

ஆரோன் பிஞ்சின் சரவெடி ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 229 ரன்கள் குவித்தது. அணியின் ஒட்டுமொத்த ஸ்கோரில் பிஞ்சின் பங்களிப்பு மட்டும் 75.1 சதவீதம் ஆகும். இதுவும் யாரும் செய்திடாத ஒரு அரிய சாதனையாகும்.

அடுத்து மெகா இலக்கை நோக்கி களம் இறங்கிய ஜிம்பாப்வே அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 129 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 100 ரன்கள் வித்தியாசத்தில் 2–வது வெற்றியை பெற்ற ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இன்று நடக்கும் 4–வது லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே– பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்