டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முதல்முறையாக வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முதல்முறையாக வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2018-07-04 22:00 GMT

சென்னை,

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்க முதல்முறையாக வெளிமாநில வீரர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்

3–வது தமிழ்நாடு பிரிமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 11–ந்தேதி முதல் ஆகஸ்டு 12–ந்தேதி வரை சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய மூன்று நகரங்களில் நடைபெறுகிறது.

8 அணிகள் பங்கேற்கும் இந்த கிரிக்கெட் தொடரில் தொடக்க ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சும், திருச்சி வாரியர்சும் நெல்லையில் மோதுகின்றன. நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் திருச்சி வாரியர்சை வருகிற 14–ந்தேதி சேப்பாக்கத்தில் எதிர்கொள்கிறது.

இதையொட்டி ஏற்கனவே 8 அணிகளுக்கும் வீரர்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டனர். இந்த சீசனில் முதல்முறையாக வெளிமாநில வீரர்களும் இடம் பெறுகிறார்கள். ஒரு அணியில் இரண்டு வெளிமாநில வீரர்கள் இடம்பிடித்து விளையாட முடியும். அந்த வீரர்கள் இந்திய அணிக்காக விளையாடி இருக்கக்கூடாது. 2018–ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எந்த அணியிலும் இடம் பெற்று இருக்கக்கூடாது. மேலும் தங்கள் சொந்த மாநில கிரிக்கெட் சங்கத்திடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். இந்த போட்டியில் பங்கேற்க விருப்பம் தெரிவித்து கேரளா, கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான், குஜராத் உள்பட 13 மாநிலங்களில் இருந்து 112 வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்திருந்தனர்.

சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

இந்த நிலையில் விதிமுறைக்குட்பட்டு ஒவ்வொரு அணிக்கும் தலா 2 வெளிமாநில வீரர்கள் ஒதுக்கீடு செய்யும் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அணிகளின் உரிமையாளர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு பரோடாவைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் கேதர் தேவ்தார், சவுராஷ்டிராவைச் சேர்ந்த ஆல்–ரவுண்டர் ‌ஷவ்ரியா சனந்தியா ஆகியோர் ஒதுக்கப்பட்டனர்.

இதே போல் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணிக்கு ஷெல்டன் ஜாக்சன் (சவுராஷ்டிரா விக்கெட் கீப்பர்), சல்மான் நிசார் (கேரளா பேட்ஸ்மேன்), கோவை கிங்ஸ் அணிக்கு தர்மேந்திரா ஜடேஜா (சவுராஷ்டிரா ஆல்–ரவுண்டர்), ஷோரப் தலிவால் (மத்திய பிரதேச ஆல்–ரவுண்டர்), மதுரை பாந்தர்ஸ் அணிக்கு அமித் வர்மா (கர்நாடக ஆல்–ரவுண்டர்), ராய்பி வின்சென்ட் கோமெஸ் (கேரளா ஆல்–ரவுண்டர்), திருச்சி வாரியர்சுக்கு ஹிமாத் சிங் (டெல்லி பேட்ஸ்மேன்), லுக்மன் மெரிவாலா (பரோடா பவுலர்), காஞ்சி வீரன்ஸ் அணிக்கு ஸ்வப்னில் சிங் (பரோடா ஆல்–ரவுண்டர்), சந்தீப் வாரியர் (கேரளா பவுலர்), திண்டுக்கல் டிராகன்சுக்கு அர்பித் வசவதா (சவுராஷ்டிரா ஆல்–ரவுண்டர்), ஹனுமா விஹாரி (ஆந்திரா ஆல்–ரவுண்டர்), காரைக்குடி காளை அணிக்கு அதித் ஷேத் (பரோடா பவுலர்), உன்முக் சந்த் (டெல்லி ஆல்–ரவுண்டர்) ஆகியோர் ஒதுக்கப்பட்டனர்.

தரம் மேம்படும்

பின்னர் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க இணைச்செயலாளர் ஆர்.ஐ.பழனி கூறுகையில், ‘பிறமாநில வீரர்கள் இடம்பெறுவதன் மூலம் டி.என்.பி.எல். கிரிக்கெட்டின் தரமும், போட்டிக்குரிய சவாலும் அதிகரிக்கும். நமது மாநில வீரர்களின் திறமை மேலும் பட்டை தீட்டப்படும். ஆடும் லெவன் அணியில் இரண்டு வெளிமாநில வீரர்களையும் சேர்த்துக் கொள்ள அணி உரிமையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

மேலும் செய்திகள்