முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய அணிக்கு பதிலடி கொடுத்தது பாகிஸ்தான்

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும்.

Update: 2018-07-05 21:00 GMT

ஹராரே,

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடர் ஜிம்பாப்வேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா இரண்டு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். இதில் ஹராரேயில் நேற்று நடந்த 5–வது லீக் ஆட்டத்தில் ஏற்கனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்ட ஆஸ்திரேலியா–பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பஹார் ஜமான் 73 ரன்கள் (42 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன்) சேர்த்தார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 149 ரன்னே எடுத்தது. இதனால் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி ஆட்டம் இழக்காமல் 37 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி முந்தைய லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது.

இன்று நடைபெறும் 6–வது மற்றும் கடைசி லீக் ஆட்டத்தில் ஜிம்பாப்வே–ஆஸ்திரேலியா அணிகள் சந்திக்கின்றன.

மேலும் செய்திகள்