கிரிக்கெட்
இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி: இங்கிலாந்து அணி வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 149 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது இந்திய அணி. #IndVsEng
கார்டிப்,

இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி இன்று கார்டிப்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் இயான் மோர்கன் பந்து வீச்சை தேர்வு செய்ய, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினர். 

அணியின் ஸ்கோர் 7 ஆக இருக்கும் போது ஜேக் பால் வீசிய பந்தில் தூக்கி அடிக்க நினைத்த ரோகிஷ் சர்மா கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்ததாக களமிறங்கிய லோகேஷ் ராகுல், ஷிகர் தவானுடன் கை கோர்த்தார். இந்நிலையில் 4-வது ஓவரில் தவான், ராகுல் என அடுத்தடுத்து இருவரும் ஆட்டமிழக்க இந்திய அணி 22 ரன்களில் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து கேப்டன் விராட் கோலியுடன், சுரேஷ் ரெய்னா இணைந்தார். இருவரும் இணைந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிபடுத்த, ஆட்டத்தின் 12.2-வது ஓவரில் ரெய்னா (27 ரன்கள்) வெளியேறினார். அடுத்ததாக தோனி களமிறங்க, இருவரும் இணைந்து நிதானமான ஆட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனிடையே 17-வது ஓவரில் விராட் கோலி 47 ரன்களில் வெளியேற, நிர்ணயிக்கப்பட்ட 20வது ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் சேர்த்தது. மகேந்திர சிங் தோனி 32 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இங்கிலாந்து அணியின் சார்பாக டேவிட் வில்லே, பிளங்க்கெட், ஜான் பால் மற்றும் ரஷித் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர். 

இதையடுத்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி வீரர்கள் களமிறங்கி விளையாடி வருகின்றனர்.