கிரிக்கெட்
2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வி:‘தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் பின்னடைவு’

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் பின்னடைவு ஏற்பட்டது என்று விராட்கோலி தெரிவித்தார்.
கார்டிப், 

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் பின்னடைவு ஏற்பட்டது என்று இந்திய அணி கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

20 ஓவர் கிரிக்கெட்

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கார்டிப்பில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 148 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 47 ரன்னும், டோனி ஆட்டம் இழக்காமல் 32 ரன்னும், சுரேஷ் ரெய்னா 27 ரன்னும் எடுத்தனர்.

37 வயதான டோனிக்கு இது 500-வது சர்வதேச கிரிக்கெட் ஆட்டமாகும். 2014-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற டோனி இதுவரை 90 டெஸ்ட், 318 ஒருநாள் மற்றும் 92 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதன் மூலம் 500 சர்வதேச போட்டியில் ஆடிய 3-வது இந்திய வீரர், ஒட்டுமொத்தத்தில் 9-வது வீரர் என்ற சிறப்பை டோனி பெற்றார்.

இங்கிலாந்து வெற்றி

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி 44 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தாலும், அலெக்ஸ் ஹாலெஸ் (58 ரன்கள், 41 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சருடன்) பொறுப்புடன் நிலைத்து நின்று ஆடி அணியை கரைசேர்த்தார். 19.4 ஓவர்களில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முந்தைய ஆட்டத்தில் 5 விக்கெட்டுகளை அள்ளிய சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 34 ரன்கள் விட்டுக் கொடுத்து விக்கெட் எதுவும் வீழ்த்தாமல் ஏமாற்றம் அளித்தார்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியது. மான்செஸ்டரில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது.

கோலி கருத்து

தோல்விக்கு பிறகு இந்திய அணி கேப்டன் விராட்கோலி கூறுகையில், ‘தொடக்கத்தில் அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை (ரோகித் சர்மா 5 ரன், தவான் 10 ரன், லோகேஷ் ராகுல் 6 ரன்) பறிகொடுத்த பிறகு அதில் இருந்து மீண்டு வருவது கடினமானதாகும். இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள் துல்லியமாக பந்து வீசியதால் நாங்கள் மோசமான ஷாட்டுகளை அடிக்க வேண்டியதாகி விட்டது. நாங்கள் இன்னும் 10 முதல் 15 ரன்கள் கூடுதலாக எடுத்து இருக்கலாம். 149 ரன்கள் இலக்கு என்பது சவாலான ஸ்கோர் என்று தான் நினைத்தோம். இருப்பினும் இறுதியில் இங்கிலாந்து அணியினர் வென்று விட்டார்கள்.

இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்து வீச்சை இங்கிலாந்து அணியினர் சிறப்பாக எதிர்கொண்டார்கள். மிடில் ஓவர்களில் அது தான் வித்தியாசத்தை ஏற்படுத்தியது. அவரது வீச்சை எதிர்கொள்வது எப்படி? என்று நன்கு பயிற்சி எடுத்து அதனை களத்தில் நன்றாக செயல்படுத்தினார்கள். ’ என்றார்.