கிரிக்கெட்
20 ஓவர் கிரிக்கெட்: பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆரோன் பிஞ்ச் முதலிடம் பிடித்தார்

20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதலிடத்தை பிடித்தார்.
துபாய்,

20 ஓவர் போட்டிக்கான அணிகள் மற்றும் வீரர்களின் தரவரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது.

இதன்படி பேட்ஸ்மேன் தரவரிசையில், சமீபத்தில் நடந்த முத்தரப்பு போட்டி தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 172 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்த ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் (891 புள்ளிகள்) 3 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். முத்தரப்பு தொடரில் 278 ரன்கள் சேர்த்த பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 44 இடங்கள் முன்னேற்றம் கண்டு 2-வது இடத்தை பெற்றுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டி தொடரில் சதம் அடித்த இந்திய வீரர் லோகேஷ் ராகுல் 9 இடங்கள் ஏற்றம் கண்டு 3-வது இடத்துக்கு முதல்முறையாக முன்னேறி இருக்கிறார். நியூசிலாந்து வீரர் காலின் முன்ரோ, பாகிஸ்தான் வீரர் பாபர் அஜாம் முறையே 4-வது மற்றும் 5-வது இடத்துக்கு சறுக்கி உள்ளனர். இந்திய வீரர்களில் ரோகித் சர்மா 2 இடம் முன்னேறி 11-வது இடமும், கேப்டன் விராட்கோலி 4 இடங்கள் சரிந்து 12-வது இடமும் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான், பாகிஸ்தான் வீரர் ஷதாப் கான், நியூசிலாந்து வீரர் சோதி, இந்திய வீரர் யுஸ்வேந்திர சாஹல், வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல் பத்ரீ ஆகியோர் முறையே முதல் 5 இடங்களில் நீடிக்கின்றனர். ஆல்-ரவுண்டர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல், ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி, வங்காளதேச வீரர் ஷகிப் அல்-ஹசன், தென்ஆப்பிரிக்க வீரர் டுமினி, வெஸ்ட்இண்டீஸ் வீரர் சாமுவேல்ஸ் ஆகியோர் மாற்றமின்றி முறையே முதல் 5 இடங்களில் தொடருகின்றனர்.

அணிகளின் தரவரிசையில் பாகிஸ்தான் அணி (132 புள்ளிகள்) முத்தரப்பு தொடரை வென்றதன் மூலம் முதலிடத்தில் நீடிக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான தொடரை வென்ற இந்திய அணி (124 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளது. முத்தரப்பு தொடரில் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய அணி (122 புள்ளிகள்) ஒரு இடம் சரிந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இங்கிலாந்து அணி (117 புள்ளிகள்) 4-வது இடமும், நியூசிலாந்து அணி (116 புள்ளிகள்) 5-வது இடமும், தென்ஆப்பிரிக்க அணி (114 புள்ளிகள்) 6-வது இடமும், வெஸ்ட்இண்டீஸ் அணி (114 புள்ளிகள்) 7-வது இடமும், ஆப்கானிஸ்தான் (91 புள்ளிகள்) 8-வது இடமும், இலங்கை அணி (85 புள்ளிகள்) 9-வது இடமும், வங்காளதேச அணி (70 புள்ளிகள்) 10-வது இடமும் வகிக்கின்றன.