கிரிக்கெட்
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் தொடர்ந்து விளையாடுவீர்களா? டி வில்லியர்ஸ் பதில்

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ள நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதா? இல்லையா? என்பது பற்றி டி வில்லியர்ஸ் முதன் முறையாக மவுனம் கலைத்துள்ளார். #IPL #ABdeVilliers
கேப்டவுன், 

தென் ஆப்பிரிக்கா மட்டும் அல்லாது உலக அளவில் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வர்ணிக்கப்பட்டவர் டி வில்லியர்ஸ். தனது அசாத்திய பேட்டிங் திறமையால்  உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் விளையாடும் நாடுகளில் டி வில்லியர்ஸுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு. 

இந்தியாவை பொறுத்தவரை, டி வில்லியர்ஸ் ஐபிஎல் தொடரிலும் விளையாடியதால், இந்திய ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் வெளிநாட்டு கிரிக்கெட் வீரராக டி வில்லியர்ஸ் திகழ்ந்தார்.

மைதானத்தில் நாலாபுறமும் பந்துகளை அடிப்பதில் வல்லவராக விளங்கியதால், மிஸ்டர்.360 டிகிரி என்றும் ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்பட்டார். புகழின் உச்சியில் இருந்த டி வில்லியர்ஸ், திடீரென, கடந்த  மே மாதம் ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு கிரிக்கெட் வட்டாரத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

டி வில்லியர்ஸ் ஓய்வு  அறிவிப்பு, தென் ஆப்பிரிக்க ரசிகர்களை மட்டும் அல்லாது, உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்களை, ஒரு நிமிடம் கலங்கச்செய்து விட்டது.  அனைத்து வகையான போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக டி வில்லியர்ஸ் அறிவித்து இருந்தார். ஆனால், ஐபிஎல் தொடரில் விளையாடுவது பற்றி எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தார். 

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்காவில் உள்ள இணையதளம் ஒன்றுக்கு பேட்டி அளித்த டி வில்லியர்ஸ், ஐபிஎல் தொடரில் விளையாடுவது குறித்து தனது மவுனத்தை கலைத்துள்ளார்.  டி வில்லியர்ஸ் தனது பேட்டியில் கூறியிருப்பதாவது:- 

“ இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடுவேன். அதேபோல், தென் ஆப்பிரிக்காவில் உள்ள டைடன்ஸ் அணிக்காகவும் விளையாட உள்ளேன். இளம் வீரர்களுக்கு உதவும் வகையில் இத்தகைய போட்டியில் விளையாட உள்ளேன்.  

பெங்களூரு மிகச்சிறந்த இடம், அதை எனது இரண்டாவது வீடு என்று கூட சொல்லலாம். உண்மையாகவே, அவ்வாறு சொல்ல முடியும். எனது 100-வது டெஸ்ட் போட்டியை பெங்களூருவில்தான் விளையாடினேன்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.