இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடக்கிறது

Update: 2018-07-11 22:30 GMT
நாட்டிங்காம்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று நடக்கிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது.

20 ஓவர் தொடரில் அசத்திய இந்திய வீரர்கள், ஒரு நாள் தொடரிலும் மிரட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், கேப்டன் விராட் கோலி, டோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் பார்மில் இருப்பது இந்திய அணிக்கு வலு சேர்க்கிறது. டோனி இன்னும் 33 ரன்கள் எடுத்தால் ஒரு நாள் போட்டியில் 10 ஆயிரம் ரன்களை கடப்பார்.

இந்திய அணியில் சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் அச்சுறுத்தக்கூடியவர்கள். இருவரும் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிப்பதை பொறுத்தே அந்த அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்த முடியும். அவர்கள் தான் இந்திய அணியின் பிரதான அஸ்திரமாக கருதப்படுகிறார்கள்.

சொந்த மண்ணில் 20 ஓவர் போட்டி தொடரை பறிகொடுத்த இங்கிலாந்து அணி பதிலடி கொடுக்க தீவிரமாக செயல்படும். கடந்த ஓராண்டு காலமாக இங்கிலாந்து அணி ரன் குவிப்பில் மலைக்க வைத்து வருகிறது 400 ரன்களை கூட சர்வசாதாரணமாக எடுக்கிறார்கள்.

கடந்த மாதம் இதே மைதானத்தில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி 481 ரன்கள் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. மோர்கன், ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோ ஆகியோர் அதிரடி காட்டுவதில் கில்லாடிகள். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக வென்ற இங்கிலாந்து வீரர்கள் இந்தியாவுக்கு எதிராகவும் ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுவார்கள்.

ஐ.சி.சி. ஒரு நாள் போட்டி அணிகளின் தரவரிசையில் இங்கிலாந்து 126 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளன. இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றினால் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏற முடியும். இங்கிலாந்து குறைந்தது ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றால் நம்பர் ஒன் இடத்தை தக்கவைக்க முடியும்.

பலம் வாய்ந்த இரு அணிகள், பேட்டிங்குக்கு சாதகமான மைதானத்தில் கோதாவில் இறங்குவதால் ரசிகர்களுக்கு ரன்விருந்து காத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இதுவரை ஒருநாள் போட்டியில் 96 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் இந்திய அணி 52 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணி 39 ஆட்டத்திலும் வெற்றி கண்டு இருக்கின்றன. 2 ஆட்டம் ‘டை’யில் முடிந்தது. 3 ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இன்றைய போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல், டோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக் அல்லது சுரேஷ் ரெய்னா, ஹர்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், உமேஷ் யாதவ், புவனேஷ்வர்குமார் அல்லது ஷர்துல் தாகூர்.

இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜாசன் ராய், பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), மொயீன் அலி, ஜோரூட், பிளங்கெட், பென் ஸ்டோக்ஸ்,அடில் ரஷித், டேவிட் வில்லி, மார்க்வுட் அல்லது ஜாக் பால்.

இந்திய நேரப்படி மாலை 5 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை சோனி சிக்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்