டெஸ்ட் அணியில் குல்தீப் யாதவுக்கு இடம் - இந்திய கேப்டன் கோலி சூசக தகவல்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் இந்திய அணியில் குல்தீப் யாதவுக்கு இடம் வழங்கப்படலாம் என்பதை கேப்டன் கோலி சூசகமாக தெரிவித்துள்ளார்.

Update: 2018-07-13 22:30 GMT
நாட்டிங்காம்,

நாட்டிங்காமில் நடந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 49.5 ஓவர்களில் 268 ரன்களுக்கு கட்டுப்படுத்தப்பட்டது. இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். ஒரு நாள் கிரிக்கெட்டில் இடக்கை சுழற்பந்து வீச்சாளரின் மிகச்சிறந்த பந்து வீச்சாக இது அமைந்தது.

அடுத்து களம் இறங்கிய இந்திய அணி ரோகித் சர்மாவின் (137 ரன், 114 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்) அதிரடி சதம், கேப்டன் விராட் கோலியின் (75 ரன்) அரைசதத்தின் துணையுடன் 40.1 ஓவர்களில் இலக்கை எட்டிப்பிடித்தது.

ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்ட 23 வயதான குல்தீப் யாதவ் நிருபர்களிடம் கூறுகையில், ‘எனக்கு இது மிகப்பெரிய நாள். தொடக்கத்திலேயே நன்றாக பந்து வீசினேன். அதிர்ஷ்டவசமாக முதல் இரண்டு ஓவர்களில் சில விக்கெட்டுகளை கைப்பற்றினேன். முதல் ஓவருக்கு பிறகு களத்தில் பந்து நன்கு திரும்புவதை உணர்ந்தேன். உடனே இது எனக்குரிய போட்டி என்று நினைத்து கொண்டேன். மைதானம் பெரியதோ, சிறியதோ பந்தை சரியான இடத்தில் ‘பிட்ச்’ செய்து, பந்து வீச்சிலும் குறிப்பிடத்தக்க வித்தியாசங்களை காட்டினால் பேட்ஸ்மேன்கள் தடுமாறி விடுவார்கள். இங்கிலாந்து வீரர்கள் பந்து வீச்சு எந்திரம் கொண்டு பயிற்சி மேற்கொண்டது குறித்து கேட்கிறீர்கள். ஒரு பவுலர் எந்த மாதிரி பந்து வீசப்போகிறார் என்பதை அவரது கையில் இருந்து பந்தை விடுவிக்கும் முன்பு கணிப்பது முக்கியம். இதை பந்து வீச்சு எந்திரத்தில் செய்ய முடியாது’ என்றார்.

மேலும் குல்தீப் யாதவ் கூறுகையில், ‘டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வாய்ப்பு கிடைப்பது பற்றி கேட்கிறீர்கள். டெஸ்ட் அணிக்கு அழைப்பு வரும் என்று நம்புகிறேன். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவிக்கும் போது யார்-யார் இடம் பெறுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்’ என்றார்.

இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவின் பந்து வீச்சு வியப்புக்குரிய வகையில் இருந்தது. சமீபத்தில் இது போன்ற பந்து வீச்சை நான் பார்த்தது இல்லை. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல் தேர்வாக வாய்ப்பு உள்ளதா? என்று கேட்கிறீர்கள். அணித்தேர்வில் எதுவும் சாத்தியமே. டெஸ்ட் போட்டி அணியில் சில ஆச்சரியங்கள் இருக்க வாய்ப்பு உண்டு. டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடுவதற்குரிய தகுதியை குல்தீப் யாதவ் அதிகப்படுத்தியுள்ளார். யுஸ்வேந்திர சாஹலும் அப்படி தான். இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அவர்களது பந்து வீச்சில் திணறுவதை பார்க்கும் போது, அவர்களை டெஸ்ட் அணியிலும் விளையாட வைக்கலாமா என்ற எண்ணத்தை தூண்டுகிறது’ என்றார்.

மேலும் செய்திகள்