டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து, மதுரை அணி முதல் வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரின் 6-வது லீக் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான போட்டியில் மதுரை பாந்தர்ஸ் 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #Tnpl2018

Update: 2018-07-16 17:55 GMT
நெல்லை, 

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நெல்லையில் இன்று நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் கோபிநாத் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணியை சந்தித்தது. டாஸ் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்ய மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அருண்கார்த்திக், ரோகித் ஆகியோர் களமிறங்கினர். போட்டி தொடங்கிய முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித் 1 ரன்னில் முருகன் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க நீலேஷ் சுப்ரமணியன் களமிறங்கினார். இதனிடையே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து வந்த மதுரை பாந்தர்ஸ் அணி நிதானமான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்தது. இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அதிகபட்சமாக சந்திரன், கெளசிக் ஆகியோர் 37 ரன்கள் எடுத்திருந்தனர். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி சார்பில் முருகன் அஸ்வின், குமார் சிங் ஆகியோர் 3 விக்கெட்டுகளும், சித்தார்த் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இந்நிலையில் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணியின் சிறப்பான பந்து வீச்சில் ரன் குவிப்பில் ஈடுபட தடுமாறியது. கங்கா ஸ்ரீதர் ராஜூ, கார்த்திக் ஆகிய வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய போதும் மற்ற வீரர்கள் ஒத்துழைப்பு தராததால் 20 ஓவர்களின் முடிவில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 127 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 26 ரன்கள் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது.

டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நெல்லை, நத்தம், சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நெல்லையில் நேற்று இரவு நடந்த 6-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, மதுரை பாந்தர்ஸ் அணியை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் கேப்டன் கோபிநாத் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த மதுரை பாந்தர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் அருண் கார்த்திக், கேப்டன் ரோகித் ஆகியோர் களம் இறங்கினார்கள்.

மதுரை பாந்தர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. ரோகித் 1 ரன்னிலும், அருண் கார்த்திக் 17 ரன்னிலும், தலைவன் சற்குணம் 5 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். 37 ரன்களுக்குள் மதுரை பாந்தர்ஸ் அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

4-வது விக்கெட்டுக்கு சந்திரன், நிலேஷ் சுப்பிரமணியத்துடன் ஜோடி சேர்ந்தார். இந்த இணை நிலைத்து நின்று ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்டனர். அணியின் ஸ்கோர் 11.5 ஓவர்களில் 81 ரன்னாக உயர்ந்த போது நிலேஷ் சுப்பிரமணியன் (31 ரன்கள், 28 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) சித்தார்த் பந்து வீச்சில் எம்.அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார்.

அடுத்து சந்திரனுடன் இணைந்த கவுசிக் அடித்து ஆடினார். சந்திரன் 29 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன் 37 ரன்கள் எடுத்த நிலையில் அலெக்சாண்டர் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். கவுசிக் தன் பங்குக்கு 37 ரன்கள் (21 பந்துகளில் ஒரு பவுண்டரி, 3 சிக்சருடன்) சேர்த்து ஆட்டம் இழந்தார்.

இதனை அடுத்து தன்வர் 14 ரன்னிலும், கார்த்திகேயன் 3 ரன்னிலும், வருண் சக்ரவர்த்தி 1 ரன்னிலும் அவுட் ஆனார்கள். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மதுரை பாந்தர்ஸ் அணி 9 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்தது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தரப்பில் எம்.அஸ்வின், சன்னிகுமார் சிங் தலா 3 விக்கெட்டும், சித்தார்த் 2 விக்கெட்டும், அலெக்சாண்டர் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 20 ஓவர்களில் 127 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் மதுரை பாந்தர்ஸ் அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டி.என்.பி.எல். போட்டி வரலாற்றில் மதுரை அணி பெற்ற முதல் வெற்றி இதுவாகும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் அதிகபட்சமாக கார்த்திக் 28 ரன்னும், கங்கா ஸ்ரீதர் ராஜூ 24 ரன்னும், எம்.அஸ்வின் 22 ரன்னும், சித்தார்த் 14 ரன்னும் எடுத்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டம் இழந்தனர். மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் ரஹில் ஷா, வருண் சக்ரவர்த்தி தலா 3 விக்கெட்டும், கிரண் ஆகாஷ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். நாளை (புதன்கிழமை) நத்தத்தில் நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-திண்டுக்கல் டிராகன்ஸ் (இரவு 7.15 மணி) அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகள்