இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் 3 ஆட்டத்துக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

Update: 2018-07-18 22:30 GMT

லீட்ஸ், 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடரில் முதல் 3 ஆட்டத்துக்கான இந்திய அணியில் ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்

3 ஆட்டங்கள் 20 ஓவர், ஒருநாள் போட்டி தொடர் முடிந்ததை தொடர்ந்து இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஆகஸ்டு 1–ந் தேதியும், 2–வது டெஸ்ட் போட்டி லண்டனில் ஆகஸ்டு 9–ந் தேதியும், 3–வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் ஆகஸ்டு 18–ந் தேதியும், 4–வது டெஸ்ட் போட்டி சவுதம்டனில் ஆகஸ்டு 30–ந் தேதியும், 5–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டனில் செப்டம்பர் 7–ந் தேதியும் தொடங்குகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இங்கிலாந்தில் உள்ள லீட்சில் கூடிய இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழுவினர் அணியை தேர்வு செய்து அறிவித்தனர்.

ரிஷாப் பான்ட் சேர்ப்பு

20 வயதான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனுமான ரிஷாப் பான்ட் இந்திய டெஸ்ட் அணியில் முதல்முறையாக இடம் பிடித்துள்ளார். ரிஷாப் பான்ட் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் இந்திய ‘ஏ’ அணியில் இடம் பெற்று விளையாடி வருகிறார். சீனியர் பேட்ஸ்மேனான ரோகித் சர்மா மீண்டும் ஓரம்கட்டப்பட்டுள்ளார். ஐ.பி.எல். போட்டியில் காயம் அடைந்த விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹாவின் காயம் இன்னும் சரியாகாததால் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். சமீபத்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும் தினேஷ் கார்த்திக் இடம் பெற்று இருந்தார்.

யோ–யோ தேர்வில் (உடல்தகுதி சோதனை) தோல்வி கண்டதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட வேகப்பந்து வீச்சாளர் முகமது ‌ஷமி உடல் தகுதி சோதனையில் சமீபத்தில் வெற்றி பெற்றதை தொடர்ந்து மீண்டும் இடத்தை பிடித்துள்ளார். இந்திய ‘ஏ’ அணியில் இடம் பிடித்து இங்கிலாந்தில் விளையாடி வரும் எம்.விஜய், ரஹானே, கருண்நாயர் ஆகியோரும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

ஜஸ்பிரித் பும்ரா

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் மற்றும் ஒருநாள் போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்ட சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் அணியில் இடம் பிடித்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின். ரவீந்திர ஜடேஜா ஆகியோரும் அணியில் உள்ளனர். காயம் காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடாத வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஆர்.அஸ்வின், எம்.விஜய், தினேஷ் கார்த்திக் ஆகிய 3 வீரர்கள் அணியில் இடம் பிடித்து இருக்கிறார்கள்.

‘வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமாரின் முதுகு வலி பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய மருத்துவ குழுவினர் ஆய்வு செய்ததும் அவர் அணியில் இடம் பெறுவது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும். ஜஸ்பிரித் பும்ரா 2–வது டெஸ்டில் இருந்து அணி தேர்வில் கருத்தில் கொள்ளப்படுவார்’ என்று இந்திய கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்திய அணி வீரர்கள்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 3 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வருமாறு:–

விராட்கோலி (கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், எம்.விஜய், புஜாரா, ரஹானே (துணைகேப்டன்), கருண்நாயர், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ரிஷாப் பான்ட், ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, இஷாந்த் ‌ஷர்மா, முகமது ‌ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ‌ஷர்துல் தாகூர்.

மேலும் செய்திகள்