இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இழந்தது இந்திய அணி: ‘எல்லா துறையிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியம்’

‘இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லா துறையிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

Update: 2018-07-18 22:30 GMT

லீட்ஸ், 

‘இந்திய கிரிக்கெட் அணி பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என எல்லா துறையிலும் முன்னேற்றம் காண வேண்டியது அவசியமானதாகும்’ என்று கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.

ஒருநாள் கிரிக்கெட்

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இங்கிலாந்துக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 2–1 என்ற கணக்கில் வென்றது. இதனை அடுத்து நடந்த 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்திலும், 2–வது போட்டியில் இங்கிலாந்து 86 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்று 1–1 என்ற கணக்கில் சமநிலை வகித்தன.

இந்த நிலையில் இந்தியா–இங்கிலாந்து அணிகள் இடையிலான 3–வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி லீட்சில் நேற்று முன்தினம் நடந்தது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, இங்கிலாந்து வீரர்களின் சிறப்பான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 256 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக விராட்கோலி 71 ரன்னும் (72 பந்துகளில் 8 பவுண்டரியுடன்), ஷிகர் தவான் 44 ரன்னும் (49 பந்துகளில் 7 பவுண்டரியுடன்), டோனி 42 ரன்னும் (66 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டேவிட் வில்லி, அடில் ரஷித் தலா 3 விக்கெட்டுகள் சாய்த்தனர்.

இங்கிலாந்து அணி வெற்றி

பின்னர் 257 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 44.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 260 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் பேர்ஸ்டோ 30 ரன்னிலும், ஜேம்ஸ் வின்ஸ் 27 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். ஜோரூட் 120 பந்துகளில் 10 பவுண்டரியுடன் 100 ரன்னும், கேப்டன் இயான் மோர்கன் 108 பந்துகளில் 9 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 88 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இருவரும் 3–வது விக்கெட்டுக்கு 186 ரன்கள் குவித்து சாதனை படைத்தனர். இந்தியாவுக்கு எதிராக ஒரு விக்கெட்டுக்கு இங்கிலாந்து அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் ஆட்டநாயகன் விருது பெற்றார். 13–வது சதம் அடித்த இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன் ஜோரூட் தொடர்நாயகன் விருதை தட்டிச் சென்றார். 2–வது போட்டியிலும் ஜோரூட் (113 ரன்கள்) சதம் அடித்து இருந்தார். 13 சதம் கண்டதன் மூலம் ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற பெருமையை ஜோரூட் பெற்றார். இதற்கு முன்பு இங்கிலாந்து வீரர் மார்கஸ் டிரெஸ்கோதிக் 12 சதங்கள் அடித்ததே அதிகபட்சமாக இருந்தது.

விராட்கோலி தலைமையில் முதல் தொடர் தோல்வி

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரை 2–1 என்ற கணக்கில் கைப்பற்றியது. 2016–ம் ஆண்டில் இருந்து இந்திய அணி இரண்டு நாடுகள் இடையிலான 9 ஒருநாள் போட்டி தொடரை தொடர்ச்சியாக வென்று இருந்தது. இந்திய அணியின் இந்த வெற்றி பயணத்துக்கு இங்கிலாந்து அணி முட்டுக்கட்டை போட்டது. விராட்கோலி தலைமையில் இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை இழப்பது இதுவே முதல்முறையாகும். விராட்கோலி கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி தொடர்ச்சியாக 7 ஒருநாள் போட்டி தொடரை வென்று இருந்தது.

தோல்விக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:–

இதுபோன்ற போட்டிகள் உலக கோப்பை போட்டிக்கு முன்பாக நாம் எந்த துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதை நமக்கு உணர்த்துவதாகும். உலக கோப்பை போட்டிக்கு முன்பு அனைத்து துறையிலும் (பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங்) சிறப்பான திறனை கொண்ட அணியாக மாற வேண்டியது அவசியமானதாகும். ஏதாவது ஒரு துறையில் மட்டும் சிறப்பான திறனை கொண்டு இருப்பதை நம்பி இருக்க முடியாது. எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியமானதாகும்.

30 ரன்கள் குறைவாக எடுத்தோம்

நாங்கள் எதிர்பார்த்த அளவுக்கு இந்த போட்டியில் ரன்கள் எடுக்கவில்லை. 25 முதல் 30 ரன்கள் குறைவாக எடுத்தோம். ஆனால் இங்கிலாந்து அணி பந்து வீச்சு, பீல்டிங், பேட்டிங் என எல்லா துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டனர். அவர்கள் இந்த வெற்றிக்கு தகுதி படைத்தவர்கள். இங்கிலாந்து போன்ற சிறந்த அணிக்கு எதிராக ஆடுகையில் சிறப்பான திறனை வெளிப்படுத்த வேண்டும். ஆட்டம் முழுவதும் ஆடுகளம் மெதுவாக இருந்ததை பார்க்க வியப்பாக இருந்தது. இங்கிலாந்தில் இப்படி ஒரு ஆடுகளத்தை இதற்கு முன் நான் பார்த்ததில்லை. பந்து எங்கு திரும்பும் என்பதை கணிக்க கடினமாக இருந்தது. இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் பந்து வீசியதுடன் சீரான இடைவெளியில் விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

கடைசி ஆட்டத்தில் 3 வீரர்கள் மாற்றம் செய்யப்பட்டது அவசியமான ஒன்று தான். தினேஷ் கார்த்திக் தனக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தினார். அவர் தனது நல்ல தொடக்கத்தை பெரியதாக மாற்றவில்லை. ‌ஷர்துல் தாகூருக்கு இன்னும் வாய்ப்புகள் கொடுக்கப்பட வேண்டும். புவனேஷ்வர் குமார் காயத்தில் இருந்து திரும்பினார். அடில் ரஷித் எனது விக்கெட்டை வீழ்த்திய பந்து வீச்சு அற்புதமானது. டெஸ்ட் போட்டி தொடர் நீண்டதாகும். இங்கிலாந்து அணியினர் எங்களுக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பது தெரியும். சவால் நிறைந்த போட்டியில் விளையாட நாங்கள் விரும்புகிறோம்.

இவ்வாறு விராட்கோலி கூறினார்.

இயான் மோர்கன் மகிழ்ச்சி

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் இயான் மோர்கன் அளித்த பேட்டியில், ‘இந்த போட்டி தொடரின் தொடக்கத்தில் நாங்கள் சிறப்பாக செயல்படவில்லை. ஆனால் தோல்வியில் இருந்து விரைவாக பாடம் கற்று முன்னேற்றம் கண்டு தொடரை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி இந்திய அணியை அருமையாக கட்டுப்படுத்தினார்கள். ஜோரூட் இந்த போட்டி தொடரில் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். குல்தீப் யாதவ் வித்தியாசமான சவாலாக விளங்கினார். அவரது பந்து வீச்சை எதிர்கொண்ட விதம் திருப்தி அளிக்கிறது. தொடர்ச்சியாக முன்னேற்றம் கண்டு நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்கள் நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்