இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2–வது டெஸ்ட் இன்று தொடக்கம்

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.

Update: 2018-07-19 21:30 GMT

கொழும்பு, 

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 3–வது நாளுக்குள் சுருட்டிய இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று (காலை 10 மணி) தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் 17 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் தான் சரிந்தன. இந்த டெஸ்டிலும் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஹெராத், தில்ருவான் பெரேரா, சன்டகன் ஆகிய சுழல்தாக்குதலை சமாளிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்குமா அல்லது சரண் அடையுமா? என்பது தெரியும்.

ஹெராத் கூறுகையில், ‘உள்ளூரில் இந்த தொடரை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தென்ஆப்பிரிக்க அணி உலக தரவரிசையில் 2–வது இடத்தில் இருக்கிறது. அவர்களை வீழ்த்தும் போது நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது’ என்றார்.

தனிப்பட்ட முறையில் சில வீரர்கள் சாதனையின் விளிம்பில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா இன்னும் 3 ரன் எடுத்தால் 9 ஆயிரம் ரன்களையும், இலங்கையின் மேத்யூஸ் 8 ரன் எடுத்தால் 5 ஆயிரம் ரன்களையும் கடப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஒரு விக்கெட் எடுத்தால், தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவரான பொல்லாக்கின் (421 விக்கெட்) சாதனையை முறியடிப்பார்.

இந்த டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளும் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 2–வது நாளில் மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் செய்திகள்