உத்தரபிரதேச அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக சர்ச்சை: ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் இடைநீக்கம்

ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Update: 2018-07-19 21:30 GMT

புதுடெல்லி, 

உத்தரபிரதேச கிரிக்கெட் அணியில் இடம் பிடிக்க வீரரிடம் பணம் கேட்டதாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து ஐ.பி.எல். சேர்மன் ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளரை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அணி தேர்வுக்கு பணம் பேரம்

ஐ.பி.எல். சேர்மனான ராஜீவ் சுக்லா உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்கத்தின் இயக்குனராகவும் இருக்கிறார். இவரது நிர்வாக உதவியாளராக அக்ரம் சைபி என்பவர் இருந்தார். இவருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் அக்ரம் சைபி மீது உத்தரபிரதேசத்தை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ராகுல் ‌ஷர்மா திடுக்கிடும் புகார் தெரிவித்துள்ளார். ‘உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்க வேண்டும் என்றால் பணம் மற்றும் இதர வகையில் தன்னை கவனிக்க வேண்டும் என்று அக்ரம் சைபி என்னிடம் தெரிவித்தார். மேலும் அவர் போலி வயது சான்றிதழ் அளித்து வருகிறார்’ என்றும் குற்றம் சாட்டி இருந்தார். அத்துடன் அக்ரம் சைபி, ராகுல் ‌ஷர்மா ஆகியோர் இடையிலான உரையாடல் இந்தி சேனலில் ஒளிபரப்பானதால் சர்ச்சை கிளம்பியது.

ராஜீவ் சுக்லாவின் உதவியாளர் இடைநீக்கம்

இதைத் தொடர்ந்து ராஜீவ் சுக்லாவின் நிர்வாக உதவியாளர் அக்ரம் சைபியை இடைநீக்கம் செய்து இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த கமி‌ஷனர் ஒருவரை நியமிக்கவும் இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. கமி‌ஷனர் நியமிக்கப்பட்டதும் அவர் அக்ரம் சபியிடம் விசாரணை நடத்தி தனது அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிப்பார். அந்த அறிக்கையை ஆய்வு செய்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை குழு இறுதி தீர்ப்பை வழங்கும்.

இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு பிரிவு தலைவர் அஜித்சிங்கிடம் கேட்ட போது, ‘டெலிவி‌ஷனில் வெளியான ஆடியோ உள்பட அனைத்து வி‌ஷயங்களும் முழுமையாக ஆய்வு செய்யப்படும். இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தும் முன்பு நாங்கள் கருத்து எதுவும் சொல்ல முடியாது’ என்று தெரிவித்தார்.

தவறு நடக்கவில்லை

உத்தரபிரதேச மாநில கிரிக்கெட் சங்க இணைசெயலாளர் யுத்வீர் சிங் கருத்து தெரிவிக்கையில், ‘அணி தேர்வில் தவறு எதுவும் நடக்கவில்லை. எந்த மாதிரியான விசாரணைக்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். அணி தேர்வு வி‌ஷயத்தில் உத்தரபிரதேச கிரிக்கெட் சங்கம் வெளிப்படையான முறையில் தான் செயல்படுகிறது. அவர்கள் இருவர் இடையே நடந்த உரையாடல் குறித்து நான் கருத்து சொல்ல முடியாது. அது அவர்களின் தனிப்பட்ட வி‌ஷயமாகும். ராகுல் ‌ஷர்மா மாநில அணியின் உத்தேச பட்டியலில் கூட ஒருபோதும் இடம் பிடித்தது கிடையாது. அதற்குரிய தகுதியும் அவருக்கு இல்லை’ என்றார்.

இந்திய அணியின் முன்னாள் வீரரும், உத்தரபிரதேச அணியின் முன்னாள் கேப்டனுமான முகமது கைப் தனது டுவிட்டர் பதிவில், ‘உத்தரபிரதேச கிரிக்கெட் அணி தேர்வில் ஊழல் நடப்பதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த விவகாரத்தில் நியாயமான விசாரணை நடைபெறுவதை ராஜீவ் சுக்லா உறுதி செய்வார் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே தன் மீதான புகாரை மறுத்துள்ள அக்ரம் சைபி, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மேலும் செய்திகள்