‘டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது’ பயிற்சியாளர் ரவிசாஸ்திரி சொல்கிறார்

‘கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது’ என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

Update: 2018-07-19 22:00 GMT

புதுடெல்லி, 

‘கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது’ என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி தெரிவித்தார்.

ரவிசாஸ்திரி விளக்கம்

லீட்சில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வி கண்டு தொடரை இழந்தது. இந்த ஆட்டம் முடிந்து வீரர்கள் பெவிலியன் திரும்பும் போது இந்திய அணியின் விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான டோனி நடுவரிடம் இருந்து ஒரு பந்தை கேட்டு வாங்கினார். வழக்கமாக வெற்றி பெறும் அணியின் வீரர்கள் தான் வீரர்கள் பந்து அல்லது ‘ஸ்டம்பை’ எடுத்து செல்வார்கள். தோல்வி கண்ட ஆட்டத்தில் டோனி பந்தை வாங்கியதாலும், அவரது ஆட்டம் இந்த தொடரில் மந்தமாக இருந்ததாலும் அவர் ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறப்போவதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.

இது குறித்து இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் கேட்ட போது, ‘டோனி ஓய்வு பெறப்போவதாக சொல்வது முட்டாள்தனமானது. அவர் எங்கும் போகப் போவது இல்லை. பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருணிடம் பந்தின் தன்மையை காட்டுவதற்காக எடுத்து வந்தார். பந்தின் நிலையை பார்த்து ஆடுகளத்தின் பொதுவான தன்மையை அறிந்து கொள்ளவே அவர் பந்தை வாங்கினார். மற்றபடி எதுவும் இல்லை’ என்று தெரிவித்தார்.

கம்பீர் விமர்சனம்

இதற்கிடையில் டோனியின் பேட்டிங் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:–

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு ஒருநாள் போட்டியிலும் டோனி பேட்டிங் செய்த விதம் அவரது வழக்கமான ஆட்டத்திற்கு மாறாக இருந்தது. களத்தில் தன்னை நிலை நிறுத்தி கொள்ள நிறைய பந்துகளை (டாட் பால்) வீணாக்கினார். ரன் சேர்ப்பதில் டோனி வேகம் காட்டவில்லை. டோனி இப்படி மந்தமாக விளையாடி நிறைய பந்துகளை வீணாக்குவது அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும். அவர் இன்னும் அதிகமான உத்வேகத்துடன் செயல்பட்டு பந்துகளை வீணாக்காமல் பேட்டிங் செய்ய வேண்டும். ஒரு வீரர் களத்துக்கு வந்தவுடன் தன்னை நிலைப்படுத்தி கொள்ள அதிகமான நேரத்தையும், பந்தையும் வீணாக்கக்கூடாது.

டோனி களம் இறங்குவது எதிரணியின் பந்து வீச்சை சிதறடித்து ரன் குவிக்க தான். ஆனால் டோனி தனது வழக்கமான ஆக்ரோ‌ஷத்தை வெளிப்படுத்தாமல் விளையாடியது வேதனைக்குரியதாகும். இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, அடில் ரஷித் சிறப்பாக பந்து வீசி டோனிக்கு கடும் நெருக்கடி அளித்தனர். டோனி தனது பேட்டிங் மீது இன்னும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்தாகும். டோனி களத்தில் இருந்தால் கடைசி 10 ஓவர்களில் மிகுந்த ஆக்ரோ‌ஷமாக அடித்து ஆடுவார். ஆனால் அந்த அதிரடி ஆட்டம் கடந்த போட்டிகளில் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. டோனி தனது வழக்கமான பாணியில் பேட்டிங் செய்து இருந்தால் இந்திய அணியின் ஸ்கோர் 280 ரன்களை கடந்து இருக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்