இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க அணி 124 ரன்னில் சுருண்டது

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 124 ரன்னில் சுருண்டது.

Update: 2018-07-21 22:00 GMT

கொழும்பு, 

இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 124 ரன்னில் சுருண்டது.

கடைசி டெஸ்ட் கிரிக்கெட்

இலங்கை–தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் நாள் ஆட்டம் முடிவில் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் எடுத்து இருந்தது. அகிலா தனஞ்ஜெயா 16 ரன்னுடனும், ஹெராத் 5 ரன்னுடனும் களத்தில் நின்றனர்.

நேற்று 2–வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 338 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. ஹெராத் 35 ரன்னில் கே‌ஷவ் மகராஜ் பந்து வீச்சில் டீன் எல்கரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அகிலா தனஞ்ஜெயா 43 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

கே‌ஷவ் மகராஜ் சாதனை

தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் கே‌ஷவ் மகராஜ் 41.1 ஓவர்கள் பந்து வீசி 129 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய 2–வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற பெருமையை பெற்றார். அதேநேரத்தில் வெளிநாட்டு மண்ணில் தென்ஆப்பிரிக்க வீரர் ஒருவரின் சிறப்பான பந்து வீச்சு இதுவாகும். இதற்கு முன்பு 1957–ம் ஆண்டில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தென்ஆப்பிரிக்க வீரர் ஹக் டேபில்டு ஒரு இன்னிங்சில் 113 ரன்கள் விட்டுக்கொடுத்து 9 விக்கெட்டுகள் சாய்த்ததே அதிகபட்சமாக இருந்தது.

9 ஆயிரம் ரன்களை கடந்தார், அம்லா

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி, இலங்கை வீரர்களின் சுழற்பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 34.5 ஓவர்களில் 124 ரன்னில் சுருண்டு பாலோ–ஆன் ஆனது. அதிகபட்சமாக கேப்டன் டுபிளிஸ்சிஸ் 48 ரன்னும், விக்கெட் கீப்பர் குயின்டான் டி காக் 32 ரன்னும் எடுத்தனர். அடுத்தபடியாக ஹசிம் அம்லா 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 3 ரன்கள் எடுக்கையில் 9 ஆயிரம் ரன்னை எட்டினார். 119–வது டெஸ்டில் விளையாடி வரும் அம்லா 9,016 ரன்கள் சேர்த்துள்ளார். இலங்கை அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் அகிலா தனஞ்ஜெயா 5 விக்கெட்டும், தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டும், ஹெராத் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

இதனை அடுத்து தென்ஆப்பிரிக்க அணிக்கு ‘பாலோ–ஆன்’ கொடுக்காமல் தனது 2–வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 34 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் குணதிலகா 61 ரன்னிலும், தனஞ்ஜெயா டிசில்வா ரன் எதுவும் எடுக்காமலும், குசல் மென்டிஸ் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். கருணாரத்னே 59 ரன்னுடனும், ஏஞ்சலோ மேத்யூஸ் 12 ரன்னுடனும் களத்தில் நின்றனர். தென்ஆப்பிரிக்க அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் கே‌ஷவ் மகராஜ் 2 விக்கெட் சாய்த்தார். இன்று 3–வது நாள் ஆட்டம் நடக்கிறது.

மேலும் செய்திகள்