கிரிக்கெட்
காஞ்சி வீரன்சை வீழ்த்தி திண்டுக்கல் அணி 3–வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நத்தத்தில் நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொண்டது.
நத்தம், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நத்தத்தில் நடந்த 12–வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி, காஞ்சி வீரன்சை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்த காஞ்சி அணியில் முதல் பந்திலேயே விஷால் வைத்யா ரன்–அவுட் ஆனார். கேப்டன் பாபா அபராஜித் (1 ரன்), லோகேஷ்வர் (18 ரன்), சுப்பிரமணியசிவா (0) ஆகியோரும் தாக்குப்பிடிக்கவில்லை. 27 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த காஞ்சி அணியை மோகித் ஹரிகரனும், பிரான்சிஸ் ரோகின்சும் பொறுப்புடன் விளையாடி நிமிர வைத்தனர். 5–வது விக்கெட்டுக்கு 139 ரன்கள் சேர்த்த இவர்கள் கடைசி வரை களத்தில் நின்றனர். 20 ஓவர்களில் காஞ்சி அணி 4 விக்கெட் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்தது. மோகித் 77 ரன்களும் (50 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்), ரோகின்ஸ் 64 ரன்களும் (41 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.பின்னர் ஆடிய திண்டுக்கல் அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வாகை சூடியது. ஹரி நிஷாந்த் 50 ரன்களும் (33 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்), கேப்டன் ஜெகதீசன், சதுர்வேத் தலா 41 ரன்களும் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர். 4–வது ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் அணி தொடர்ச்சியாக பெற்ற 3–வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி 6 புள்ளிகளுடன், பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது. இன்னும் வெற்றிக்கணக்கை தொடங்காத காஞ்சி வீரன்சுக்கு விழுந்த 3–வது அடி இதுவாகும்.