ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஆட்டத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பஹார் ஜமான், இமாம் உல்–ஹக் புதிய சாதனை

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி ‘மெகா’ வெற்றியை பெற்றது.

Update: 2018-07-22 22:30 GMT

புலவாயோ, 

ஜிம்பாப்வேக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி ‘மெகா’ வெற்றியை பெற்றது. தொடக்க வீரர் பஹார் ஜமான் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்து புதிய வரலாறு படைத்தார்.

பாகிஸ்தான் வெற்றி

பாகிஸ்தான் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 5–வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புலவாயோ நகரில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள் வழக்கம் போல் ஜிம்பாப்வே பவுலர்களை திக்குமுக்காட வைத்தனர். தொடக்க ஆட்டக்காரர்கள் இமாம் உல்–ஹக்கும், பஹார் ஜமானும் முதல் விக்கெட்டுக்கு 168 ரன்கள் (25 ஓவர்) திரட்டி அசத்தினர். முந்தைய ஆட்டத்தில் இரட்டை சதம் நொறுக்கிய பஹார் ஜமான் 85 ரன்களில் (83 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பாபர் அசாமும் ஜிம்பாப்வே பந்து வீச்சை பின்னியெடுத்தார். மறுமுனையில் அபாரமாக ஆடிய இமாம் உல்–ஹக் தனது 4–வது சதத்தை எட்டினார். இந்த தொடரில் மட்டும் அவர் 3 சதங்கள் அடித்துள்ளார். இமாம் உல்–ஹக் தனது பங்குக்கு 110 ரன்கள் (105 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார்.

பாபர் அசாமும், சோயிப் மாலிக் (18 ரன்), ஆசிப் அலி (18 ரன்) ஆகியோரின் ஒத்துழைப்புடன் தனது 8–வது சதத்தை பூர்த்தி செய்தார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்தது. பாபர் அசாம் 106 ரன்களுடன் (76 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தார். தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே அணி 50 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 233 ரன்களே எடுத்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 131 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 5–0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது.

பஹார் ஜமான் சாதனை

*இந்த ஆட்டத்தின் மூலம் பாகிஸ்தான் தொடக்க வீரர் 28 வயதான பஹார் ஜமான் சில சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஆனார். அவர் இதுவரை 18 இன்னிங்சில் களம் இறங்கி 1,065 ரன்கள் எடுத்துள்ளார். இதன் மூலம் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ், இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன், ஜோனதன் டிராட், தென்ஆப்பிரிக்காவின் குயின்டான் டி காக், பாகிஸ்தானின் பாபர் அசாம் ஆகியோர் தலா 21 இன்னிங்சில் ஆயிரம் ரன்களை எட்டியதே இந்த வகையில் சாதனையாக இருந்தது. அவர்களை பஹார் ஜமான் பின்னுக்கு தள்ளியுள்ளார்.

*இந்த தொடரில் பஹார் ஜமான் 2 சதம், 2 அரைசதம் உள்பட 515 ரன்கள் குவித்துள்ளார். இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒன்றில் 500 ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார்.

இமாம் உல்–ஹக்

*பஹார் ஜமானும், இமாம் உல்–ஹக்கும் இணைந்து இந்த தொடரில் முதல் விக்கெட்டுக்கு மொத்தம் 704 ரன்கள் (5 ஆட்டம்) சேகரித்துள்ளனர். ஒரு தொடரில் அதிக ரன்கள் எடுத்த ஜோடிகளில் இவர்கள் 2–வது இடம் வகிக்கிறார்கள். 2011–ம் ஆண்டு உலக கோப்பை தொடரில் இலங்கையின் தரங்காவும், தில்‌ஷனும் ஜோடியாக 800 ரன்கள் (9 ஆட்டம்) எடுத்ததே சாதனையாக நீடிக்கிறது.

*இன்ஜமாம் உல்–ஹக்கின் உறவினரான 22 வயதான இமாம் உல்–ஹக் இதுவரை 9 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் அடித்துள்ளார். முதல் 10 ஆட்டங்களுக்குள் 4 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

மேலும் செய்திகள்