கிரிக்கெட்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி: 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது இலங்கை

கொழும்பில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. #SriLankaVsSouthAfrica
கொழும்பு, 

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இலங்கை 338 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 124 ரன்களும் எடுத்தன. பின்னர் 214 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி  81 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. கருணாரத்னே 85 ரன்களும், மேத்யூஸ் 71 ரன்களும் விளாசினர்.

இதனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலையையும் சேர்த்து இலங்கை அணி தென்ஆப்பிரிக்காவுக்கு 490 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. பின்னர் 490 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா அணியினர், இலங்கை அணியினரின் சுழற்பந்தில் சிக்கி தவித்தனர். அணியின் தொடக்க ஆட்டக்காரரான மார்க்ராம் 14 ரன்களில் வெளியேற, தியூஸ் டி புரூன், டீன் எல்கருடன் இணைந்தார். அணியின் ஸ்கோர் 80-ஆக இருக்கும் போது எல்கரும் 37 ரன்களில் வெளியேறினார்.

இதனிடையே சுழற்பந்து வீச்சாளர்கள் ஹெராத், தில்ருவான் பெரேரா, அகிலா தனஞ்ஜெயா ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறிய தென்ஆப்பிரிக்கா அணி விக்கெட்டுகளை பறிகொடுத்த வண்ணமிருந்தது. அந்த அணியின் தியூஸ் டி புரூன் (101 ரன்கள்), பவுமா (63 ரன்கள்) ஆகியோரை தவிர அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் தென்ஆப்பிரிக்க அணி 86.5 ஓவர்களில் 290 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 199 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இலங்கை அணி சார்பில் ஹெராத் 6 விக்கெட்டுகளும், பெரேரா மற்றும் தனஞ்ஜெயா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

போட்டியின் ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருதை இலங்கை வீரர் திமுத் கருணாரத்னே தட்டி சென்றார். மேலும் இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.