கிரிக்கெட்
சுரேஷ் ரெய்னாவின் உதவியால் எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது: இங்கிலாந்து ஓட்டுநர் உருக்கம்

.சுரேஷ் ரெய்னாவின் உதவியால்தான் எனது மனைவியை காப்பாற்ற முடிந்தது என்று இங்கிலாந்து பேருந்து ஓட்டுநர் உருக்கமாக தெரிவித்துள்ளார். #SureshRaina
லண்டன்,

ரெய்னாவின் உதவியால்தான் என் மனைவி இன்று உயிரோடு இருக்கிறார் என்று இங்கிலாந்தில் இந்திய அணி செல்லும் பேருந்துக்கு  டிரைவராக இருக்கும் ஜெப் குட்வின் தெரிவித்துள்ளார். இங்கிலாந்துக்கு எப்போது இந்திய அணி சென்றாலும், இந்திய அணிக்காக ஏற்பாடு செய்யப்படும் பேருந்தின் ஓட்டுநராக ஜெப் குட்வின் என்பவர் வருவார். இந்த முறையும் அவர் இந்திய அணி பயணம் செய்யும் பேருந்தின் ஓட்டுநராக இருந்து வருகிறார். அவர் பிசிசிஐக்கு அளித்த பேட்டியில் சுரேஷ் ரெய்னா குறித்து சில விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். 

ஓட்டுநர் ஜெப் குட்வின் பேட்டியில் கூறியிருப்பதாவது:

நான் பார்த்த கிரிக்கெட் அணிகளிலேயே மிகவும் ஒழுக்கமான அணி என்றால் அது இந்திய கிரிக்கெட் அணிதான்.  உலகக்கோப்பைப் போட்டியின் போது, பல்வேறு அணிகளுக்காக பேருந்தை ஓட்டி இருக்கிறேன். ஆனால், இந்திய அணிபோல் ஒழுக்கமான அணியை பார்த்தது  இல்லை. போட்டி முடிந்த அடுத்த சில மணிநேரத்தில் பேருந்துக்கு வந்துவிடுவார்கள். ஆஸ்திரேலிய வீரர்கள் இரவு முழுவதும் மது அருந்திவிட்டு, கும்மாளமிட்டு நள்ளிரவுக்கு் மேல்தான் பேருந்துக்கு வருவார்கள். இந்திய அணியின் ஒழுக்கமான பழக்கம்தான் கிரிக்கெட் விளையாட்டை அடுத்த கட்டதுக்கு நகர்த்தும்.

என் மனைவிக்கு புற்றுநோய் இருந்தது. அதற்கு சிகிச்சை அளிக்க என்னிடம் போதுமான பணம் இல்லை. இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்து வந்திருந்த இந்தியஅணி வீரர் சுரேஷ் ரெய்னா என்னிடம் ஒருநாள் கேட்டார். நான் அவரிடம் என் மனைவியின் உடல்நிலைகுறித்து விளக்கினேன்.

உடனே சுரேஷ் ரெய்னா தன்னுடைய ஆடைகளை லீட்ஸ் நகரில் ஏலம் விடுவதற்கு ஏற்பாடு செய்தார். அதில் கிடைத்த பணம் முழுவதையும் என் மனைவியின் சிகிச்சைக்காக அளித்தார். இன்று என் மனைவியின் உடல்நலம் பெற்று, மகிழ்ச்சியாக இருக்கிறார். என் மனைவி உயிரோடு இருக்க சுரேஷ் ரெய்னா செய்த உதவிதான் காரணம். இதை நான் எப்போதும் மறக்கமாட்டேன்” இவ்வாறு ஜெப் குட்வின் தெரிவித்தார்.