டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை: முதலிடத்தை இழந்தார், ரபடா

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ரபடா முதலிடத்தை இழந்தார்.

Update: 2018-07-24 22:15 GMT
துபாய்,

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியதை தொடர்ந்து வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நேற்று வெளியிட்டது. இதன்படி தென்ஆப்பிரிக்க தொடரில் 158, 60, 53, 85 ரன்கள் வீதம் மொத்தம் 356 ரன்கள் சேர்த்து தொடர்நாயகன் விருது பெற்ற இலங்கை வீரர் கருணாரத்னே, டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் 3 இடங்கள் முன்னேறி 754 புள்ளிகளுடன் 7-வது இடத்தை பிடித்துள்ளார். அதே சமயம் தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா 3 இடங்கள் குறைந்து 14-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதலிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவன் சுமித்தும் (929 புள்ளி), 2-வது இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலியும் (903 புள்ளி), 3-வது இடத்தில் இங்கிலாந்தின் ஜோ ரூட்டும் (855 புள்ளி) நீடிக்கிறார்கள்.

பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ரபடா (882 புள்ளி) ஒரு இடம் சரிந்து 2-வது இடத்துக்கு இறங்கினார். இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் ரபடா 97 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் மட்டுமே எடுத்ததால் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்கவைத்துக் கொள்ள முடியவில்லை. இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (892 புள்ளி) மீண்டும் முதலிட அரியணையில் ஏறினார். இந்தியாவின் ரவீந்திர ஜடேஜா 3-வது இடமும், தென்ஆப்பிரிக்காவின் பிலாண்டர் 4-வது இடமும், இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 5-வது இடமும் வகிக்கிறார்கள். இலங்கை தொடரில் மொத்தம் 16 விக்கெட்டுகளை கைப்பற்றிய தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் கேஷவ் மகராஜ் 5 இடங்கள் உயர்ந்து 18-வது இடத்துக்கு வந்துள்ளார். கொழும்பு டெஸ்டில் ஒரு விக்கெட்டும் வீழ்த்தாத தென்ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் 5 இடங்களை பறிகொடுத்து 24-வது இடத்துக்கு (635 புள்ளி) பின்தங்கினார். கடந்த 11 ஆண்டுகளில் ஸ்டெயின் பெற்ற குறைந்த தரவரிசை புள்ளி இதுவாகும்.

மேலும் செய்திகள்