கிரிக்கெட்
ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு: ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பில் ஒரே பிரிவில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன.
துபாய்,

6 அணிகள் இடையிலான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை துபாய், அபுதாபியில் நடக்கிறது. இதற்கான போட்டி அட்டவணையை ஆசிய கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் தகுதி சுற்று அணியும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்-4 சுற்றுக்கு முன்னேறும்.

செப்டம்பர் 15-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் இலங்கை-வங்காளதேச அணிகள் சந்திக்கின்றன. இந்திய அணி, பரம போட்டியாளரான பாகிஸ்தானுடன் 19-ந்தேதி பலப்பரீட்சை நடத்துகிறது.