தூத்துக்குடியை வீழ்த்தி திண்டுக்கல் அணி 4-வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் தூத்துக்குடியை வீழ்த்தி திண்டுக்கல் அணி 4-வது வெற்றியை சுவைத்தது.

Update: 2018-07-24 23:00 GMT
நத்தம்,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழா சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சும், திண்டுக்கல் டிராகன்சும் மல்லுகட்டின. ‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் கேப்டன் ஜெகதீசன் முதலில் தூத்துக்குடியை பேட் செய்ய பணித்தார்.

இதன்படி பேட்டிங்கை தொடங்கிய தூத்துக்குடி அணிக்கு ஆரம்பத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. கேப்டன் கவுசிக் காந்தி (6 ரன்), அடுத்து வந்த ஆகாஷ் சும்ரா (4 ரன்) ஒற்றை இலக்கத்துடன் நடையை கட்டினர். தினேஷ் (24 ரன்), விக்கெட் கீப்பர் ஆனந்த் (13 ரன்), சீனிவாசன் (12 ரன்) ஆகியோரும் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்கவில்லை.

தூத்துக்குடி அணி 72 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை (10.5 ஓவர்) தாரைவார்த்து தத்தளித்தது. இந்த சிக்கலான சூழலில் ஆல்-ரவுண்டர் சதீசும், ரங்கராஜனும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். படிப்படியாக ஸ்கோரையும் உயர்த்தினர். இறுதிகட்டத்தில் சதீஷ் அதிரடியில் மிரட்டினார். அவரது பேட்டில் பட்ட பந்துகள் எல்லைக்கோட்டை நோக்கி தெறித்து ஓடின. கடந்த சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக விளையாடியவரான சதீஷ், 20 ஓவர் கிரிக்கெட்டில் முதல்முறையாக அரைசதத்தை கடந்தார்.

கடைசி ஓவரை வீசிய சுழற்பந்து வீச்சாளர் சிலம்பரசனின் பந்து வீச்சில் 2 சிக்சர் பறக்க விட்ட சதீஷ் அடுத்த பந்தில் அவரிடமே கேட்ச் ஆனார். சதீஷ் 74 ரன்கள் (41 பந்து, 7 பவுண்டரி, 4 சிக்சர்) சேர்த்தார். சதீஷ்-ரங்கராஜன் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 101 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்க அம்சமாகும். அதே ஓவரில் ரங்கராஜன் (37 ரன், 24 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்), அடுத்து வந்த சாய் கிஷோர் (1 ரன்) இருவரும் ரன்-அவுட் ஆனார்கள்.


20 ஓவர்கள் முடிவில் தூத்துக்குடி அணி 8 விக்கெட் இழப்புக்கு 177 ரன்கள் சேர்த்தது. கடைசி 4 ஓவர்களில் மட்டும் அந்த அணியினர் 57 ரன்கள் திரட்டினர். பின்னர் கடின இலக்கை நோக்கி ஆடிய திண்டுக்கல் அணியில் ஹரி நிஷாந்த் (4 ரன்), சதுர்வேட் (11 ரன்), கேப்டன் ஜெகதீசன் (31 ரன்) ஆகியோர் ஸ்கோர் 62 ரன்களை எட்டுவதற்குள் வெளியேறினர்.

இதனால் நெருக்கடியில் சிக்கிய திண்டுக்கல் அணியை விவேக் அதிரடி காட்டி மீட்டெடுத்தார். சாய் கிஷோரின் ஒரே ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி விரட்டியடித்து ஆட்டத்தின் போக்கை மாற்றினார். அதிசயராஜ் டேவிட்சனின் பந்து வீச்சில் 47 ரன்னில் இருந்த போது கொடுத்த கேட்ச் வாய்ப்பை தினேஷ் நழுவ விட்டார். இது தான் திருப்புமுனையாக அமைந்தது. விவேக் தனது பங்குக்கு 62 ரன்கள் (32 பந்து, 4 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினார். இதற்கிடையே அனிருத் (6 ரன்) மற்றும் ஆதித்யா அருண் (5 ரன்) பெவிலியன் திரும்பினர்.

கடைசி 2 ஓவர்களில் அந்த அணியின் வெற்றிக்கு 21 ரன்கள் தேவைப்பட்டது. ஏற்கனவே 2 விக்கெட்டுகளை கபளகரம் செய்திருந்த வேகப்பந்து வீச்சாளர் அதிசயராஜ் டேவிட்சன் 19-வது ஓவரை வீசினார். அவரது ஓவரில் முகமது- அபினவ் கூட்டணி ஒரு சிக்சர், 2 பவுண்டரி உள்பட அந்த ஓவரிலேயே வெற்றிக்குரிய 21 ரன்களையும் எடுத்து அமர்க்களப்படுத்தியது. பதற்றத்தில் அதிசயராஜ் 2 வைடுகளையும் விட்டுக்கொடுத்தார்.

திண்டுக்கல் அணி 19 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. 5-வது ஆட்டத்தில் விளையாடி 4-வது வெற்றியை பெற்ற திண்டுக்கல் அணி ஏறத்தாழ அடுத்த சுற்றை எட்டியுள்ளது. முகமது 36 ரன்களுடனும் (24 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), அபினவ் 15 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 4-வது ஆட்டத்தில் ஆடிய தூத்துக்குடி அணிக்கு இது 2-வது தோல்வியாகும்.

மேலும் செய்திகள்