3 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ் அணி

வங்காளதேசத்திற்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. #WIvsBang

Update: 2018-07-26 07:43 GMT
கயானா,

வங்காளதேச கிரிக்கெட் அணி, வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான டெஸ்ட் தொடரை வெஸ்ட்இண்டீஸ் அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த நிலையில் வெஸ்ட்இண்டீஸ்-வங்காளதேச அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில், முதல் போட்டியில் வங்காளதேச அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்நிலையில் இரண்டாவது ஒரு நாள் போட்டி கயானாவில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயில் மற்றும் லெவிஸ் ஆகியோர் களமிறங்கினர். அணியின் ஸ்கோர் 29 ஆக இருக்க லெவிஸ் (12 ரன்கள்) மொர்டசா பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆனார். அடுத்ததாக ஷாய் ஹோப் களமிறங்க, சிறிது நேரத்தில் கெய்ல் (29 ரன்கள்) அவுட் ஆகி வெளியேறினார். இதற்கு பின்னர் மைதானத்திற்குள் நுழைந்த ஷிம்ரோன் ஹெட்மையர் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த அணியின் ஸ்கோர் சற்று உயர்ந்தது. ஷிம்ரோனுடன் ஜோடி சேர்ந்த ரோவ்மேன் 44 ரன்களில் வெளியேற, அடுத்து களமிறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும் மறுபுறத்தில் நிலைத்து நின்று ஆடிய ஷிம்ரோன் ஹெட்மையர் அசத்தலாக விளையாடி சதத்தை பூர்த்தி செய்தார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 271 ரன்கள் சேர்த்தது. அணியில் அதிகபட்சமாக ஷிம்ரோன் ஹெட்மையர் 125 ரன்கள் குவித்தார். வங்காளதேசம் சார்பில் ருபெல் ஹோசைன் 3 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான், ஷகிப் அல் ஹசன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர். 

பின்னர் 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமிம் இக்பால் மற்றும் அனமுல் ஹாக் ஆகியோர் களமிறங்கினர். இந்நிலையில் அனமுல் 12 ரன்களில் வெளியேற ஷகிப் அல் ஹசன், தமிம் இக்பாலுடன் கை கோர்த்தார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்த ஜோடி அணியை ரன்வேகத்தை நன்கு உயர்த்தியது. இதனிடையே அணியின் ஸ்கோர் 129 ஆக இருக்க தமிம் இக்பால் 54 ரன்களில் பெவிலியன் திரும்பினார். பின்னர் ஷகிப் அல் ஹசனும் (56 ரன்கள்) சிறிது நேரத்தில் வெளியேற, முஷ்பிகுர் ரகிம் முகமதுல்லாவுடன் இணைந்து வெற்றிக்கு போராடினார். இதனிடையே சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்த வந்த வங்காளதேச அணி வெற்றி பெறும் சூழலில் இருந்தது. கடைசி ஓவரில் அந்த அணிக்கு 8 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் பந்திலேயே முஷ்பிகுர் ரகிம் (68 ரன்கள்) தூக்கி அடிக்க நினைத்து கேட்ச் ஆகி வெளியேறினார். எஞ்சிய 5 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே வங்காளதேச அணி எடுத்தது. இறுதியில் 268 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த வங்காளதேச அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸிடம் வீழ்ந்தது.

இந்த வெற்றியின் மூலம் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலை வகிக்கின்றன. இந்நிலையில் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வருகிற ஜூலை 28-ந் தேதி நடைபெறவிருக்கிறது.

மேலும் செய்திகள்