இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கானத் தேதிக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு

ஆசியக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில், இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டிக்கானத் தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளது.

Update: 2018-07-26 08:24 GMT
புதுடெல்லி, 

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டி 1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. இந்நிலையில் 14 வது போட்டிக்கான அட்டவணையைச் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சமீபத்தில் வெளியிட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடக்கும் இந்தப் போட்டியில் முதல் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28-ம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.

இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காள தேசம் , ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும். முதல் போட்டியில் இலங்கை அணியும், வங்காள தேசமும் மோதுகின்றன. செப்டம்பர் 19-ம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான். லீக் சுற்றில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள், சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெறும். இதில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டியில் விளையாடும்.

செப்டம்பர் 15- இலங்கை-வங்காள தேசம் 
செப்டம்பர் 16- பாகிஸ்தான்-தகுதிச்சுற்று அணி, 
செப்டம்பர் 17- இலங்கை-ஆப்கானிஸ்தான்
செப்டம்பர் 18- ல் இந்தியா-தகுதிச்சுற்று அணி
செப்டமபர் 19-ல் இந்தியா-பாகிஸ்தான்
 செப்டம்பர் 20- வங்காளதேசம்-ஆப்கானிஸ்தான் அணி
செப்டம்பர் 23- குரூப்ஏ வின்னர்- குரூப் ஏ ரன்னர், 
செப்டம்பர் 23- குரூப் பி வின்னர்- குரூப் பி ரன்னர்
செப்டம்பர் 25- குரூப் ஏ வின்னர்- குரூப் பி வின்னர்,
செப்டம்பர் 26- குரூப் ஏ ரன்னர்- குரூப் பி ரன்னர், 
செப்டம்பர் 28- இறுதிப்போட்டி.

இதில் செப்டம்பர் 18-ம் தேதி தகுதி சுற்று அணியோடு விளையாடும் இந்திய அணி, மறு நாள் பாகிஸ்தான் அணியுடன் மோதுவது போல அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு இரண்டு நாள் ரெஸ்ட் கொடுத்துவிட்டு, இந்தியாவுக்கு ரெஸ்ட்டே கொடுக்காமல் மறுநாளே விளையாட வைப்பது என்ன நியாயம்? அதனால் இந்த தேதியை மாற்ற வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்