இந்தியா-எஸ்செக்ஸ் அணிகள் மோதிய பயிற்சி ஆட்டம் ‘டிரா’

எஸ்செக்ஸ் கவுண்டி அணிக்கு எதிராக இந்திய அணி மோதிய பயிற்சி கிரிக்கெட் போட்டி ‘டிரா’ ஆனது.

Update: 2018-07-28 02:07 GMT
செம்ஸ்போர்டு,

இந்தியா - எஸ்செக்ஸ் அணிகள் இடையிலான மூன்று நாள் பயிற்சி கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டில் கடந்த 25-ந்தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இந்திய அணி 395 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடிய எஸ்செக்ஸ் அணி 2-வது நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய எஸ்செக்ஸ் அணி முதல் இன்னிங்சில் 94 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் சேர்த்து ‘டிக்ளேர்’ செய்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பால் வால்டர் 75 ரன்களும், மைக்கேல் பெப்பர் 68 ரன்களும் எடுத்தனர். இந்திய தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளும், இஷாந்த் 
ஷர்மா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

முந்தைய நாள் பயிற்சியின் போது கையில் லேசாக காயமடைந்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் நேற்று பவுலிங் செய்தார். 5 ஓவர்கள் பந்து வீசிய அவர் 21 ரன்கள் விட்டுக்கொடுத்தார். விக்கெட் கிடைக்கவில்லை. இதன் மூலம் அவரது காயம் பயப்படும்படி இல்லை என்பது தெளிவாகியுள்ளது.

அடுத்து 36 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி 21.1 ஓவர்களில் ஷிகர் தவான் (0), புஜாரா (23 ரன்) ஆகியோரின் விக்கெட்டுகளை இழந்து 89 ரன்கள் எடுத்திருந்த போது, மழை குறுக்கிட்டதால் அத்துடன் ஆட்டம் நிறுத்தப்பட்டு டிராவில் முடித்துக் கொள்ளப்பட்டது. அப்போது லோகேஷ் ராகுல் 36 ரன்களுடனும், ரஹானே 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதலாவது டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.

மேலும் செய்திகள்