கிரிக்கெட்
இங்கிலாந்து மண்ணில் கோலி ரன் குவிப்பார் என அவர் நிரூபிக்கும் நேரம் இது: கிளான் மெக்ராத்

இங்கிலாந்து மண்ணில் கோலி ரன் குவிப்பார் என அவர் நிரூபிக்கும் நேரம் இது தான் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளான் மெக்ராத் கூறியுள்ளார். #McGrath
சென்னை,

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான கிளான் மெக்ராத், சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அங்கு செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட மெக்ராத் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது கூறியதாவது:-

இந்தியா-இங்கிலாந்து தொடரை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்? என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, ”இந்தியா-இங்கிலாந்து தொடர் சுவாரஸ்சியமாக இருக்கும். இந்திய அணியின் பேட்டிங் எப்போதுமே வலிமையான ஒன்று. சமீப காலங்களில் இந்திய அணியின் பந்துவீச்சும் சிறந்த முறையில் இருந்து வருகிறது. காயம் காரணமாக புவனேஷ்வர் குமார் மற்றும் பும்ரா ஓய்வில் இருப்பது, இந்திய அணிக்கு கடினமான சூழ்நிலையை உருவாக்கும்” என பதில் அளித்தார்.

இந்நிலையில் 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ரன் குவிக்காத நிலையில் இந்த தொடர் அவருக்கு எவ்வளவு முக்கியமானது என நிருபர் ஒருவர் கேள்வி கேட்டார். இதற்கு பதில் அளித்த மெக்ராத், ”எல்லாத் தொடரும் முக்கியமானது தான். விராட் கோலி எந்தப்பகுதியிலும் சிறப்பாக ஆடக்கூடியவர். ஆனால், இங்கிலாந்தில் அவருடைய விளையாட்டு முறையில் மாற்றம் இருக்க வேண்டும் எனக் கருதுகிறேன். பேட்டிங்கில் அனைத்து விதமான நுட்பங்களையும் அறிந்தவர் கோலி. மிகவும் வெளிப்படையாக, எந்தவித பயமுமின்றி விளையாடும் விராட்கோலி, மற்ற வீரர்களை விட சிறந்து விளங்குபவர். இங்கிலாந்து சீதோசன நிலையில் கோலி ரன் குவிப்பார் என அவர் நிரூபிக்கும் நேரம் இது தான். இங்கிலாந்து மண்ணில் பந்தை எதிர்கொள்வது என்பது கடினமான ஒன்று தான். அங்குள்ள சூழ்நிலைகளை புரிந்து கொண்டு விளையாடினால் விராட் கோலி நிச்சயமாக அதிக ரன்களை குவிப்பார்” எனக் கூறினார்.