கிரிக்கெட்
சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தி தூத்துக்குடி பேட்ரியாட்ஸ் அணி 3-வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் தூத்துக்குடி அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து 3-வது வெற்றியை பதிவு செய்தது.
சென்னை,

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு அரங்கேறிய 18-வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, முன்னாள் சாம்பியன் தூத்துக்குடி பேட்ரியாட்சை எதிர்கொண்டது.

‘டாஸ்’ ஜெயித்த கில்லீஸ் கேப்டன் கோபிநாத் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த சீசனில் முதல்முறையாக முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக விக்கெட் கீப்பர் கார்த்திக்கும், கங்கா ஸ்ரீதர் ராஜூவும் களம் புகுந்தனர். இவர்கள் அணிக்கு நல்ல தொடக்கம் அமைத்து தந்தனர். 3-வது ஓவரில் கணேஷ்மூர்த்தியின் பந்து வீச்சில் 2 பவுண்டரி விரட்டிய கார்த்திக், அதே ஓவரில் அவுட் ஆகி இருக்க வேண்டியது. அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை தூத்துக்குடி வீரர்கள் கோட்டை விட்டனர்.

ஸ்கோர் 41 ரன்களாக (6 ஓவர்) உயர்ந்த போது, சாய்கிஷோரின் சுழற்பந்து வீச்சில் கங்கா ஸ்ரீதர் ராஜூ 23 ரன்களில் (20 பந்து, 4 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் கோபிநாத் நுழைந்தார். மறுமுனையில் அதிரடி காட்டிய கார்த்திக் 43 ரன்களில் (31 பந்து, 6 பவுண்டரி, ஒரு சிக்சர்) வெளியேறினார்.

13.1 ஓவர்களில் கில்லீஸ் அணி 100 ரன்களை தொட்டது. கார்த்திக்குக்கு பிறகு வந்த எம்.அஸ்வின் (15 ரன்) நிலைக்கவில்லை. இதைத் தொடர்ந்து 4-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஹரிஷ்குமார் சிறிது நேரமே நின்றாலும் 2 சிக்சர், 2 பவுண்டரி விளாசி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். அவர் தனது பங்குக்கு 27 ரன் (12 பந்து) எடுத்தார். எதிர்பார்க்கப்பட்ட சசிதேவ் (6 ரன்) சோபிக்கவில்லை. அவருக்கு பிறகு வந்த ஆரிப் 2 ரன்னில் வீழ்ந்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 6 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்தது. நடப்பு தொடரில் கில்லீஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். கேப்டன் கோபிநாத் 40 ரன்களுடன் (34 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) கடைசி வரை களத்தில் நின்றார். தூத்துக்குடி தரப்பில் ஜேசுராஜ், சாய் கிஷோர், அதிசயராஜ் டேவிட்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். தூத்துக்குடி பீல்டர்கள் 3-4 கேட்சுகளை நழுவ விட்டனர். அத்துடன் எக்ஸ்டிரா வகையில் 9 வைடு உள்பட 11 ரன்கள் விட்டுக்கொடுத்தது கவனிக்கத்தக்கது.

பின்னர் 168 ரன்கள் இலக்கை நோக்கி தூத்துக்குடி அணி விளையாடியது. பதிலடி கொடுக்கும் வகையில் பேட்டை சுழட்டிய தொடக்க ஆட்டக்காரர்களான கேப்டன் கவுசிக் காந்தியும், தினேசும் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் (5.2 ஓவர்) திரட்டினர். தினேஷ் 25 ரன்களில் கேட்ச் ஆனார்.

அடுத்து விக்கெட் கீப்பர் ஆனந்த் இறங்கினார். 7 ஓவர்களில் அந்த அணி ஒரு விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. மழை நின்ற பிறகும் தூத்துக்குடி வீரர்களின் அதிரடி வேட்டை தொடர்ந்தது. இதனால் அவர்களின் ஸ்கோர் துரிதமாக எகிறியது. கேப்டன் கவுசிக் காந்தி 45 ரன்களும் (37 பந்து, 6 பவுண்டரி), அடுத்து வந்த அபிஷேக் 17 ரன்களும் (2 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதன் பிறகு ஆனந்தும், சதீசும் கைகோர்த்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர். சதீஷ் தொடர்ந்து 2 பவுண்டரி நொறுக்கி ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்து வைத்தார். தூத்துக்குடி அணி 17.2 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆனந்த் 48 ரன்களுடனும் (34 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்), சதீஷ் 30 ரன்களுடனும் (12 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர். தூத்துக்குடி வீரர் ஆனந்த் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

5-வது லீக்கில் ஆடிய தூத்துக்குடி அணிக்கு இது 3-வது வெற்றியாகும். சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும்.

அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் கேப்டன் கோபிநாத் கூறுகையில், ‘நாங்கள் நன்றாகவே பேட் செய்தோம். 180 ரன்கள் வரை எடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் சிறப்பாக பந்து வீசி கட்டுப்படுத்தி விட்டனர். ஈரப்பதம் காரணமாக சுழற்பந்து வீச்சாளர்கள் ‘கிரீப்’ கிடைக்காமல் பந்து வீச சிரமப்பட்டனர்’ என்றார்.