கிரிக்கெட்
திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி காரைக்குடி காளை 4-வது வெற்றி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் காரைக்குடி காளை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணியை வீழ்த்தி 4-வது வெற்றியை ருசித்தது.
நெல்லை, 

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் நெல்லையில் நேற்று இரவு நடந்த 21-வது லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-காரைக்குடி காளை அணிகள் மோதின.

‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் டிராகன்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹரி நிஷாந்த், கேப்டன் ஜெகதீசன் ஆகியோர் களம் இறங்கினார் கள். இருவரும் அடித்து ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 23 ரன்னாக இருந்த போது ஹரி நிஷாந்த் 16 ரன்னில் (14 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) முகுந்தன் பந்து வீச்சில் ராஜ்குமாரிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

அடுத்து களம் கண்ட அனிருத்தும் வேகமாக மட்டையை சுழற்றினார். அணியின் ஸ்கோர் 69 ரன்னை எட்டிய போது கேப்டன் ஜெகதீசன் (25 ரன்கள், 22 பந்துகளில் 4 பவுண்டரியுடன்) ராஜ்குமார் பந்து வீச்சில் யோமகேசிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். அடுத்து வந்த சதுர்வேத் 14 பந்துகளில் ஒரு சிக்சருடன் 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதைத்தொடர்ந்து விவேக், அனிருத்துடன் இணைந்தார். விவேக் அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தினார். மோகன் பிரசாத் வீசிய 16-வது ஓவரில் விவேக் 4 சிக்சர், 2 பவுண்டரி விளாசி 32 ரன்கள் குவித்து அசத்தினார். டி.என்.பி.எல். போட்டியில் ஒரே ஓவரில் விட்டுக்கொடுக்கப்பட்ட அதிக ரன் இதுவாகும். இதற்கு முன்பு ஒரு ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அடுத்த ஓவரில் விவேக் (42 ரன்கள், 13 பந்துகளில் 2 பவுண்டரி, 5 சிக்சருடன்) முகுந்தன் பந்து வீச்சில் கவினிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். அடுத்து சிறப்பாக ஆடிய அனிருத் 53 ரன்கள் (42 பந்துகளில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) எடுத்த நிலையில் யோமகேஷ் பந்து வீச்சில் ராஜ்குமாரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 177 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. காரைக்குடி காளை அணி தரப்பில் முகுந்தன் 5 விக்கெட்டும், யோமகேஷ் 2 விக்கெட்டும், சுவாமிநாதன், ராஜ்குமார் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய காரைக்குடி காளை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட ஆதித்யா, கேப்டன் அனிருதா ஆகியோர் அடித்து அடி அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். அணியின் ஸ்கோர் 94 ரன்னை தொட்ட போது அனிருதா (43 ரன்கள், 18 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சருடன்) மோகன் அபினவ் பந்து வீச்சில் போல்டு ஆனார். அடுத்த ஓவரில் ஆதித்யா (49 ரன்கள், 29 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன்) ஆதித்யா அருண் பந்து வீச்சில் முகமதுவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து வந்த மான் பாப்னா 20 ரன்னிலும் (15 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்), ஷாஜகான் 18 ரன்னிலும் (13 பந்துகளில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழந்தனர். 18.3 ஓவர்களில் காரைக்குடி காளை அணி 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ராஜ்குமார் 31 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன் 41 ரன்னும், ராஜ்ஹமானி சீனிவாசன் 5 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 5-வது ஆட்டத்தில் ஆடிய காரைக்குடி அணி பெற்ற 4-வது வெற்றி இதுவாகும்.