கிரிக்கெட்
இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சதமடித்தார் இந்திய கேப்டன் விராட் கோலி

பர்மிங்காமில் நடைபெற்று வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதமடித்தார். #IndVsEng
பர்மிங்காம், 

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 

இந்தியாவுக்கு எதிராக நேற்று தொடங்கிய முதலாவது டெஸ்டில் சிறப்பான தொடக்கம் கண்ட இங்கிலாந்து அணி இறுதிகட்டத்தில் தடுமாறியது. சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 4 விக்கெட்டுகளை சாய்த்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்து இருந்தது. இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்றது. 10 பந்துகளை மட்டும் எதிர்க்கொண்ட இங்கிலாந்து அணி 10வது விக்கெட்டையும் இழந்தது. சாம் குர்ரான், முகமது சமி பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 89.4 ஓவர்கள் விளையாடிய இங்கிலாந்து அணி 287 ரன்களை எடுத்தது. இதனையடுத்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விஜய் மற்றும் தவான் ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடி இங்கிலாந்து அணி வீரர்களின் பந்து வீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடியது. இந்திய அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்த இந்த ஜோடி 50 ரன்களில் பிரிந்தது. முரளி விஜய் (20 ரன்கள்), சாம் குர்ரான் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப, சிறிது நேரத்தில் தவானும் 26 ரன்களில் நடையை கட்டினார். 

இதனிடையே இங்கிலாந்து அணியினரின் பலம் வாய்ந்த பந்து வீச்சில் தாக்கு பிடிக்க முடியாத இந்திய அணி வீரர்கள் வந்த வேகத்தில் விக்கெட்டுகளை பறி கொடுத்து பெவிலியன் திரும்பிய வண்ணமிருந்தனர். ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்த போதிலும், மறுபுறம் ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்ட இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை மிக நேர்த்தியாக எதிர்கொண்டு விளையாடி வந்தார். கோலியை அவுட் ஆக்கினால் ஜாலி என்ற முனைப்புடன் பந்து வீசிய இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனிடையே இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு சிறப்பாக விளையாடி வந்த விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் தனது 22-வது சதத்தை பூர்த்தி செய்தார். இங்கிலாந்து மண்ணில் அவர் அடித்திருக்கும் முதல் சதம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே இந்திய அணி 76 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்கள் எடுத்தது. கேப்டன் கோலி 149 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரான் 4 விக்கெட்டுகளையும், ரஷித், ஆண்டர்சன், ஸ்டோக்ஸ் ஆகியோர் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி, இங்கிலாந்து அணியை விட 13 ரன்கள் பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.