கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் காரைக்குடி காளையை வீழ்த்திமதுரை பாந்தர்ஸ் அணி அடுத்த சுற்றுக்கு தகுதி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
நத்தம், 

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தி 5-வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

24-வது லீக் ஆட்டம்

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் நத்தத்தில் நேற்றிரவு அரங்கேறிய 24-வது லீக் ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ்-காரைக்குடி காளை அணிகள் பலப்பரீட்சை நடத்தின. ‘டாஸ்’ ஜெயித்த மதுரை பாந்தர்ஸ் அணியின் கேப்டன் ரோகித் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த காரைக்குடி காளை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஆதித்யா, கேப்டன் அனிருதா ஆகியோர் களம் இறங்கினார்கள். இருவரும் அடித்து ஆடினார்கள். அணியின் ஸ்கோர் 5.1 ஓவர்களில் 35 ரன்னை தொட்ட போது ஆதித்யா (25 ரன்கள், 16 பந்துகளில் 5 பவுண்டரியுடன்) கிரண் ஆகாஷ் பந்து வீச்சில் போல்டு ஆனார்.

காரைக்குடி காளை

158 ரன்னில் ‘ஆல்-அவுட்’

அடுத்து வந்த பாப்னா 17 ரன்னிலும் (17 பந்துகளில் 2 பவுண்டரியுடன்), ஷாஜகான் 1 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அணியின் ஸ்கோர் 104 ரன்னாக உயர்ந்த போது நிலைத்து நின்று ஆடிய கேப்டன் அனிருதா (48 ரன்கள், 43 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) கவுசிக் பந்து வீச்சில் வருண் சக்ரவர்த்தியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதனை அடுத்து ராஜ்குமார் 20 ரன்னும் (9 பந்துகளில் 1 பவுண்டரி, 2 சிக்சருடன்), சீனிவாசன் 23 ரன்னும் (20 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) தங்கள் பங்குக்கு சேர்த்து ஆட்டம் இழந்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆனார்கள். 20 ஓவர்களில் காரைக்குடி காளை அணி 158 ரன்னுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. முகுந்தன் 3 ரன்னுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். மதுரை பாந்தர்ஸ் அணி தரப்பில் தன்வர், கிரண் ஆகாஷ், வருண் சக்ரவர்த்தி, கவுசில் தலா 2 விக்கெட் வீழ்த்தினார்கள்.

மதுரை அணி

அடுத்த சுற்றுக்கு தகுதி

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 7 ஓவர்களில் 56 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது. 5-வது விக்கெட்டுக்கு சந்திரன், தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் அதிரடியாக ஆடி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். ஸ்கோர் 119 ரன்னாக உயர்ந்த போது சந்திரன் (38 ரன்கள், 25 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) மகேஷ் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் கவினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

18.2 ஓவர்களில் மதுரை பாந்தர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 50 பந்துகளில் 10 பவுண்டரி, 2 சிக்சருடன் 85 ரன்கள் குவித்தும், தன்வார் 5 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 6-வது ஆட்டத்தில் ஆடிய மதுரை பாந்தர்ஸ் அணி 5-வது வெற்றியை ருசித்ததுடன் அடுத்த சுற்றுக்கும் (பிளே-ஆப்) தகுதி பெற்றது. 6-வது ஆட்டத்தில் ஆடிய காரைக்குடி காளை அணி சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும்.