டி.என்.பி.எல். கிரிக்கெட்: வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் கோவை கிங்ஸ் மதுரை பாந்தர்ஸ் அணியுடன் இன்று மோதல்

3–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 26–வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்–மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2018-08-03 21:00 GMT

நெல்லை,

3–வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று (சனிக்கிழமை) இரவு நெல்லை சங்கர் நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 26–வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்–மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதுகின்றன. ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணி 6 ஆட்டத்தில் ஆடி 5 வெற்றி, ஒரு தோல்வியுடன் 10 புள்ளிகள் குவித்து அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறி விட்டது. அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி 3 வெற்றி, 3 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. இன்றைய ஆட்டம் கோவை கிங்ஸ் அணிக்கு மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் தான் அந்த அணி அடுத்த சுற்று வாய்ப்பை பெற முடியும். கடந்த லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி 14 ரன் வித்தியாசத்தில் காஞ்சி வீரன்ஸ் அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்வியில் இருந்து மீண்டு வர கோவை அணி முயற்சிக்கும். மதுரை பாந்தர்ஸ் அணி கடைசி லீக் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் காரைக்குடி காளையை வீழ்த்தியது. அந்த ஆட்டத்தில் அந்த அணி வீரர் அருண் கார்த்திக் 85 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். முந்தைய வெற்றி உத்வேகத்தை தொடருவதுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைக்க மதுரை பாந்தர்ஸ் அணி முனைப்பு காட்டும். வெற்றிக்காக இரு அணிகளும் மல்லுக்கட்டும் என்பதால் இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் ஏற்கனவே 2 முறை நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இதில் ஒரு ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணி வெற்றி பெற்றது. மற்றொரு ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இன்று இரவு 7.15 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

மேலும் செய்திகள்