கிரிக்கெட்
சேப்பாக் சூப்பர் கில்லீசை தோற்கடித்து திண்டுக்கல் டிராகன்ஸ் அணி அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.
நத்தம், டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நடந்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.25–வது லீக் ஆட்டம் டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடர் சென்னை, நெல்லை, நத்தம் (திண்டுக்கல்) ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் நத்தத்தில் நேற்றிரவு நடந்த 25–வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்–திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின.‘டாஸ்’ ஜெயித்த திண்டுக்கல் டிராகன்ஸ் கேப்டன் ஜெகதீசன் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கார்த்திக், ராகுல் ஆகியோர் களம் இறங்கினார்கள். அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கார்த்திக் (13 ரன், 8 பந்துகளில் 3 பவுண்டரியுடன்) முகமது பந்து வீச்சில் அனிருத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் ஸ்கோர் 17 ரன்னாக இருந்தது.சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 120 ரன்கள் அடுத்து களம் இறங்கிய கேப்டன் கோபிநாத் அடித்து ஆடினார். நிதானமாக ஆடிய ராகுல் 14 ரன்னில் (14 பந்துகளில் 2 பவுண்டரியுடன்) அபினவ் பந்து வீச்சில் சிலம்பரசனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து எம்.அஸ்வின், கோபிநாத்துடன் இணைந்தார். அஸ்வின் நிதானமான ஆட்டத்தை கடைப்பிடித்தார். அணியின் ஸ்கோர் 64 ரன்னாக இருந்த போது கோபிநாத் (25 ரன்கள், 18 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன்) ஆட்டம் இழந்தார். அடுத்த வந்த சசிதேவ் (2 ரன்), பொறுமையாக ஆடிய அஸ்வின் (15 ரன், 23 பந்துகளில்), ஹரிஷ்குமார் (8 ரன்), சிவக்குமார் (3 ரன்), சம்ருத் பாட் (0), அருண்குமார் (0) ஆகியோர் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்து நடையை கட்டினார்கள்.நிலைத்து நின்று ஆடிய ஆரிப் (36 ரன்கள், 34 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சருடன்) கடைசி விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். அவருக்கு யாரும் பக்கபலமாக நிற்கவில்லை. எனவே 19.3 ஓவர்களில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 120 ரன்னில் ‘ஆல்–அவுட்’ ஆனது. திண்டுக்கல் டிராகன்ஸ் அணி தரப்பில் சிலம்பரசன் 3 விக்கெட்டும், திரிலோக் நாக், தோதாத்ரி தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.திண்டுக்கல் அடுத்த சுற்றுக்கு தகுதி பின்னர் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய கேப்டன் ஜெகதீசன், ஹரி நிஷாந்த் ஆகியோர் அடித்து அணி அணியை வெற்றியை நோக்கி வேகமாக அழைத்து சென்றனர். 10.2 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 89 ரன்னாக உயர்ந்த போது ஹரி நிஷாந்த் (34 ரன்கள், 30 பந்துகளில் 3 பவுண்டரி, 2 சிக்சருடன்) எம்.அஸ்வின் பந்து வீச்சில் சம்ருத் பாத்திடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.அடுத்து களம் இறங்கிய விவேக்கும் அதிரடியாக ஆடினார். 13.3 ஓவர்களில் திண்டுக்கல் டிராகன்ஸ் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஜெகதீசன் 43 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்னும், விவேக் 9 பந்துகளில் ஒரு பவுண்டரி, 2 சிக்சருடன் 20 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் ஆடிய திண்டுக்கல் டிராகன்ஸ் அணி 5–வது வெற்றியுடன் அடுத்த சுற்றுக்கு (பிளே–ஆப்) முன்னேறியது.