வெற்றிபெறுமா இந்திய அணி? - வெற்றிக்கு 84 ரன்கள் தேவை

இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றிபெற 84 ரன்கள் தேவைப்படும் நிலையில் இந்திய அணி நிதான ஆட்டத்தினை வெளிபடுத்தி வருகிறது. #INDVsENG

Update: 2018-08-04 03:03 GMT
பர்மிங்காம்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்களுக்கு ‘ஆல்-அவுட்’ ஆனது. அதிகபட்சமாக கேப்டன் ஜோரூட் 80 ரன்னும், விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோ 70 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டும், முகமது ‌ஷமி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி, கேப்டன் விராட்கோலியின் (149 ரன்கள்) பொறுப்பான ஆட்டத்தால் சரிவில் இருந்து மீண்டு 274 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இங்கிலாந்து அணி தரப்பில் சாம் குர்ரன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், அடில் ரஷித், பென் ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. ஜென்னிங்ஸ், கேப்டன் ஜோரூட் ஆகியோர் ஆட்டத்தை தொடர்ந்தனர். முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 53 ஓவர்களில் 180 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. இந்திய அணி தரப்பில் இஷாந்த் ‌ஷர்மா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 2-வது இன்னிங்சை ஆடியது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் சரிவர சோபிக்காத நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேர முடிவில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. வெற்றி பெற இன்னும் 84 ரன்கள் தேவை. விராத் கோலி 43(76) ரன்களுடனும், தினேஷ் கார்த்திக் 18(44) ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இங்கிலாந்து தரப்பில் ஸ்டுவர்ட் பிராட் இரண்டு விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், பென் ஸ்டோக்ஸ் மற்றும் சாம் குரான் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர்.

ஆட்டம் நிறைவு பெற இன்னும் இரண்டு நாட்கள் மீதம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்