கிரிக்கெட்
‘பின் வரிசை பேட்ஸ்மேன்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும்’–கேப்டன் விராட்கோலி

வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டம் ‘திரில்’ நிறைந்ததாக இருந்தது. அணியாக நாங்கள் ஆடிய விதம் அருமையாக இருந்தது.
வெற்றிக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் ஜோரூட் அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டம் ‘திரில்’ நிறைந்ததாக இருந்தது. அணியாக நாங்கள் ஆடிய விதம் அருமையாக இருந்தது. ஆட்டத்தில் ஏற்றம், இறக்கம் இருந்தாலும் எல்லா புகழும் எங்களது பந்து வீச்சாளர்களையே சாரும். நாங்கள் அமைதியாக ஆட்டத்தில் கவனம் செலுத்தி சிறப்பாக செயல்பட்டால் வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். இரண்டு அணிகளும் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டன. இந்த வெற்றியின் மூலம் நாங்கள் அடுத்த போட்டிக்கு நல்ல நம்பிக்கையுடன் செல்வோம்’ என்று தெரிவித்தார்.தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் விராட்கோலி கருத்து தெரிவிக்கையில், ‘இது ஒரு சிறப்பான ஆட்டம் என்று நான் நினைக்கிறேன். ஆர்வமிக்க இந்த ஆட்டத்தில் பங்கேற்றதில் பெருமை அடைகிறேன். நிறைய நேரங்களில் நாங்கள் சரிவில் இருந்து மீண்டு வந்தோம். ஆனால் இங்கிலாந்து அணியினர் தளர்ச்சியின்றி செயல்பட்டனர். ரன் எடுக்க விடாமல் எங்களுக்கு நெருக்கடி அளித்தனர். நிச்சயமாக நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். இருப்பினும் கடைசி வரை நாங்கள் போராடிய விதம் பெருமை அளிக்கிறது. இது போன்ற பெரிய போட்டி தொடரில் எங்கள் அணி தொடங்கிய விதம் பெருமைக்குரியது. பின் வரிசை பேட்ஸ்மேன்களிடம் இருந்து தொடக்க வரிசை பேட்ஸ்மேன்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அச்சமின்றி நேர்மறையான எண்ணத்துடன் விளையாட வேண்டியது அவசியமானதாகும்’ என்றார்.