‘‘இளம்வீரர்கள் திறமையை வெளிப்படுத்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி உதவும்’’ நெல்லையில் டோனி பேட்டி

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நெல்லை சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்–மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின.

Update: 2018-08-04 22:30 GMT

நெல்லை,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று இரவு நெல்லை சங்கர்நகரில் உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடந்த லீக் ஆட்டத்தில் கோவை கிங்ஸ்–மதுரை பாந்தர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, ‘டாஸ்’ போட்டு தொடங்கி வைத்தார். அப்போது கேலரியில் திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து டோனி கை அசைத்தார். இதனால் ரசிகர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். பின்னர் டோனி அளித்த பேட்டியில் ‘இந்த மைதானத்துக்கு முதல்முறையாக வந்து உள்ளேன். மைதானம் சிறப்பாக உள்ளது. இதுபோன்ற போட்டிகளை நடத்துவதன் மூலம் கிராமப்புறங்களில் கிரிக்கெட் ஆட்டம் மேம்படும். இளம்வீரர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி மிகவும் உதவியாக இருக்கும். இங்குள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு தூண்டுகோலாகவும் அமையும்‘ என்றார்.

முன்னதாக, டோனி தென்காசி வழியாக செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணைக்கு சென்றார். அங்கு அணையை பார்த்து ரசித்த அவர், அணைக்கு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான அருவிகளையும் பார்த்து மகிழ்ந்தார். தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் டோனியை பார்க்க ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் திரண்டு இருந்தனர். இதனால் அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்