கிரிக்கெட்
3-வது ஒரு நாள் போட்டியிலும் இலங்கையை வீழ்த்திதொடரை கைப்பற்றியது தென்ஆப்பிரிக்கா

இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
கண்டி, 

இலங்கைக்கு எதிரான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் தென்ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

அறிமுக வீரர் ஹென்ரிக்ஸ் சதம்

இலங்கைக்கு சென்றுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒரு நாள் போட்டி கண்டியில் நேற்று நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்த இலங்கை கேப்டன் மேத்யூஸ் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது. இலங்கை மண்ணில் தென்ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதில் 3-வது வரிசையில் இறங்கிய தென்ஆப்பிரிக்க புதுமுக வீரர் 28 வயதான ரீஜா ஹென்ரிக்ஸ் 88 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் அறிமுக போட்டியில் குறைந்த பந்துகளில் சதம் விளாசியவர் என்ற சாதனையை ஹென்ரிக்ஸ் சொந்தமாக்கினார். அத்துடன் அறிமுக போட்டியில் சதம் அடித்த 3-வது தென்ஆப்பிரிக்க வீரர் என்ற சிறப்பையும் அவர் பெற்றார். ஹென்ரிக்ஸ் 102 ரன்களில் (89 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழந்தார். டுமினி (92 ரன், 8 பவுண்டரி, 4 சிக்சர்), அம்லா (59 ரன்), டேவிட் மில்லர் (51 ரன்) ஆகியோரும் ஸ்கோர் உயர்வுக்கு முக்கிய பங்கு வகித்தனர்.

இலங்கை தோல்வி

தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 285 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக தனஞ்ஜெயா டி சில்வா 84 ரன்கள் எடுத்தார். தென்ஆப்பிரிக்க தரப்பில் நிகிடி 4 விக்கெட்டுகளும், பெலக்வாயோ 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஒரு நாள் கிரிக்கெட்டில் இலங்கை அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் தோல்வி கண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென்ஆப்பிரிக்க அணி தொடரையும் 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன் மூலம் டெஸ்டில் அடைந்த தோல்விக்கு தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுத்துள்ளது. 4-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளைமறுதினம் நடக்கிறது.