சச்சின் டெண்டுல்கருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தது: கங்குலி வெளியிட்ட ரகசியம்

சச்சின் டெண்டுல்கருக்கு தூக்கத்தில் நடக்கும் பழக்கம் இருந்தது என்று கங்குலி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது தெரிவித்தார். #SachinTendulkar

Update: 2018-08-06 13:45 GMT
மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் இருபெரும் தூண்களாக விளங்கி வந்த வீரர்களான சச்சின் தெண்டுல்கரும் சவுரவ்  கங்குலியும் களத்திற்கு உள்ளே மட்டும் அல்லாது, களத்திற்கு வெளியேயும் நல்ல நட்புறவை கொண்டு இருந்தனர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு வர்ணணையாளராகவும், மேற்கு வங்காள கிரிக்கெட் சங்க நிர்வாக பணிகளிலும் ஈடுபட்டு வரும் சவுரவ் கங்குலி,  நிகழ்ச்சி ஒன்றில், தெண்டுல்கருடன் விளையாடிய போது நிகழ்ந்த பசுமையான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

சவுரவ் கங்குலி கூறியதாவது:- “ சச்சின் தெண்டுல்கரின் ஒட்டுமொத்த கிரிக்கெட் வாழ்க்கையையும் நான் அருகில் இருந்து பார்த்துள்ளேன். 14-வயது முதல் இந்தியாவுக்காக விளையாட துவங்கினோம். நாங்கள் இருவரும் துவக்க ஆட்டக்காரர்களாக இறங்கி விளையாடி இருக்கிறோம். இதன்காரணமாக சச்சின் தெண்டுல்கர் மனநிலையையும் நான் அறிந்து இருந்தேன். களத்தில் அவர் என்ன செய்ய விரும்புகிறார், எங்கு விளையாட விரும்புகிறார், யார் மீது கோபத்தில் உள்ளார் என்பது என ஏறக்குறைய அனைத்தையும் நான் அறிந்தவனாக இருந்தேன். 

சச்சின் தெண்டுல்கரும், காம்ளியும் சேர்ந்து என்னை ஒருமுறை பயமுறுத்தினார்கள். ஒரு ஞாயிற்றுக்கிழமை , மதியம் நான் அறையில் தூங்கிக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு 14 வயது இருக்கும். நாங்கள் 3 பேரும் ஒரே பயிற்சிப் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி எடுத்து வருகிறோம். மாலை 5 மணிக்கு எழுந்து கிரிக்கெட் விளையாடலாம் என்பதால், நன்றாக அயர்ந்து தூங்கிவிட்டேன்.

திடீரென்று எழுந்து பார்த்தால், என் அறை முழுவதும் தண்ணீர். என்னுடைய சூட்கேஸ், பேக் எல்லாம் தண்ணீரில் மிதந்தன. குளியலறை தண்ணீர் பைப் வெடித்துவிட்டதா என்று ஓடிச் சென்று பார்த்தேன். ஆனால், குளியலறையில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்பட்டது. எப்படி தண்ணீர் வந்தது என்று யோசித்துக் கொண்டே வாயில் கதவை திறந்துப் பார்த்தால், ஒரு பெரிய வாளியில் காம்ப்ளியும், சச்சினும் தண்ணீரை ஊற்றத் தயாராக இருந்தார்கள்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இப்படிச் செய்தீர்கள்? என்று கேட்டேன். நீ ஏன் மதியம் தூங்கினாய்? என்று கேட்டனர். மதியம் தூங்குவது குற்றமா? என்று நான் பதில் கேள்வி எழுப்பினேன்.

அதற்கு இருவரும், டென்னிஸ் பந்தில் கிரிக்கெட் விளையாட நினைத்தோம். ஆனால், நீ தூங்கிக்கொண்டிருந்தாய். உன்னை எழுப்பவே தண்ணீரை ஊற்றினோம் என்று சொல்ல அனைவரும் சிரித்துவிட்டோம். மற்றொரு சம்பவத்தில் சச்சினைப் பார்த்து நான் பயந்துவிட்டேன். இங்கிலாந்துக்கு டெஸ்ட் தொடருக்காகச் சென்றிருந்தோம். என்னுடைய அறையில் 5-க்கும் மேற்பட்ட வீரர்கள் தங்கி இருந்தனர். என்னுடைய படுக்கைக்கு அருகே சச்சினின் படுக்கை இருந்தது.

ஒரு நாள் நள்ளிரவில் நான் கண்விழித்துப் பார்த்தபோது சச்சினைக் காணவில்லை. இரவு 1.30 மணி ஆகிறது. எங்கு சென்றார் சச்சின் என்று சிந்தித்துக்கொண்டே, வெளியேவந்து பார்த்தேன். அப்போது, சச்சின் எவ்வித சலனமும் இல்லாமல், ஹோட்டல் முன் இருக்கும் இடத்தில் நடந்துவிட்டு, என்னைப் பார்த்தும், பார்க்காமல் மீண்டும் வந்து படுக்கையில் படுத்துக்கொண்டார்.

மறுநாளும் இதேபோன்று நள்ளிரவில் சச்சின் நடந்து சென்றார். நான் இதைப் பார்த்து எதற்காக நள்ளிரவில் நடந்து செல்கிறார், பின் யாருக்கும் தெரியாமல் படுத்துக்கொள்கிறார் என்று சிந்தித்தேன். சிறிதுநேரத்தில் ஹோட்டல் அறையை  சுற்றி வந்த சச்சின் மீண்டும் வந்து படுக்கையில் படுத்துக்கொண்டார்.எனக்குச் சிறிது பயமாக இருந்தது. 

மறுநாள் காலையில் சிற்றுண்டி உண்ணும்போது, சச்சின் உனக்கு விளையாட நேரமே இல்லையா? என்றேன். நான் என்ன செய்தேன் என்றார்.நள்ளிரவில் 1.30 மணிக்கு எழுந்து ஹோட்டலைச் சுற்றி வருகிறாய், என்னைப் பயமுறுத்த வேறுவழியில்லையா எனக் கேட்டேன். அதற்கு எனக்கு இரவில் நடக்கும்  பழக்கம் இருக்கிறது. அதனால்தான் அப்படி நடந்தேன் என்றார். இரவில் தூக்கத்தில் சச்சினுக்கு நடக்கும் பழக்கம் இருக்கிறது என அப்போதுதான் எனக்குத் தெரியும்”  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்