கிரிக்கெட்
விராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் - இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்

விராட்கோலியை வீழ்த்த புதிய திட்டம் வகுத்துள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
பர்மிங்காம்,

பர்மிங்காமில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. கேப்டன் விராட்கோலி முதல் இன்னிங்சில் 149 ரன்னும், 2-வது இன்னிங்சில் 51 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்குகிறது.

இந்த நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டிரேவர் பெய்லிஸ் அளித்த பேட்டியில், ‘இந்திய அணி கேப்டன் விராட்கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் இல்லையென்றாலும், அதற்கு மிகவும் நெருக்கமான இடத்தில் இருக்கிறார். முதல் டெஸ்டில் இரு இன்னிங்சிலும் அவர் ஆடிய விதம் உயர்தரமானதாகும். அடுத்து வரும் போட்டிகளில் அவருக்கு எதிராக எங்கள் யுக்தியை மாற்ற இருக்கிறோம். விராட்கோலிக்கு கொடுக்கும் நெருக்கடியை இந்திய அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கும் கொடுக்க போகிறோம். இதன் மூலம் தானாகவே விராட்கோலிக்கு நெருக்கடி அதிகரிக்கும். இதனால் அவரது விக்கெட்டை எளிதில் வீழ்த்த முடியும்’ என்று தெரிவித்தார்.