கிரிக்கெட்
டி.என்.பி.எல். கிரிக்கெட்: தள்ளிவைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டியில் திண்டுக்கல்-மதுரை, கோவை-காரைக்குடி அணிகள் இன்று மோத உள்ளன.
நத்தம்,

டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் தள்ளி வைக்கப்பட்ட 2 ஆட்டங்கள் நத்தத்தில் இன்று நடைபெறுகிறது. மாலையில் நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பாந்தர்ஸ் அணியும், இரவு நடைபெறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் கோவை கிங்ஸ்-காரைக்குடி காளை அணியும் மோதுகின்றன.

3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நெல்லை, நத்தம் (திண்டுக்கல்), சென்னை ஆகிய இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. லீக் ஆட்டங்கள் முடிவில் திண்டுக்கல் டிராகன்ஸ், மதுரை பாந்தர்ஸ், கோவை கிங்ஸ், காரைக்குடி காளை ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறின.

முதலாவது தகுதி சுற்று ஆட்டம் நெல்லையில் நேற்று முன்தினம் இரவும், வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் நத்தத்தில் நேற்று இரவும் நடைபெறுவதாக இருந்தது. தி.மு.க.தலைவர் கருணாநிதி மறைவு காரணமாக இந்த 2 ஆட்டமும் தள்ளி வைக்கப்படுவதாக டி.என்.பி.எல். நிர்வாகம் அறிவித்து இருந்தது.

ஒத்திவைக்கப்பட்ட இந்த 2 ஆட்டமும் நத்தத்தில் (திண்டுக்கல்) இன்று (வியாழக்கிழமை) நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி பிற்பகல் 3.15 மணிக்கு நடைபெறும் முதலாவது தகுதி சுற்று போட்டியில், லீக் சுற்றில் முதலிடம் பிடித்த ஜெகதீசன் தலைமையிலான திண்டுக்கல் டிராகன்ஸ்-2-வது இடம் பெற்ற டி.ரோகித் தலைமையிலான மதுரை பாந்தர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி, சென்னையில் வருகிற 12-ந் தேதி இரவு நடைபெறும் இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெறும். தோல்வி அடையும் அணிக்கு இறுதிப்போட்டிக்கு நுழைய இன்னொரு வாய்ப்பு உண்டு.

இரவு 7.15 மணிக்கு அரங்கேறும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் 3-வது இடம் பிடித்த அபினவ் முகுந்த் தலைமையிலான கோவை கிங்ஸ் அணி, 4-வது இடம் பெற்ற எஸ்.அனிருதா தலைமையிலான காரைக்குடி காளை அணியை எதிர்கொள்கிறது. இதில் தோல்வி அடையும் அணி போட்டியில் இருந்து வெளியேறும். வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியாது.

இந்த மோதலில் வெற்றி பெறும் அணி, நத்தத்தில் நாளை இரவு நடைபெறும் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில், முதலாவது தகுதி சுற்றில் தோல்வி அடையும் அணியுடன் மோதும். இதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி அடையும். இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.