கருணாநிதி மறைவு: இந்திய கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Update: 2018-08-08 23:15 GMT
சென்னை,

தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல் -அமைச்சருமான கருணாநிதி பண்முக திறமை கொண்டவர் என்பது எல்லோருக்கும் தெரியும். அதே நேரத்தில் அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகரும் ஆவார். அவர் வேலைப்பளுவுக்கு மத்தியிலும் கிரிக்கெட் ஆட்டத்தை டெலிவிஷனில் கண்டு களிப்பதை வாடிக்கையாக வைத்து இருந்தார். சென்னையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடந்தால் நேரில் வந்து பார்க்கும் பழக்கம் உடையவர்.

கபில்தேவ், தெண்டுல்கர், ஸ்ரீநாத், டோனி, எல்.பாலாஜி ஆகியோர் கருணாநிதியை கவர்ந்த கிரிக்கெட் பிரபலங்கள் பட்டியலில் அடங்குவார்கள். ஜாம்பவான் தெண்டுல்கரின் சுயசரிதை புத்தக்கத்தை படித்து முடித்ததுடன், அவருக்கு வாழ்த்தும் தெரிவித்து இருந்தார். அவர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளையும் ரசித்து பார்ப்பது உண்டு.

நேற்று முன்தினம் மறைந்த கருணாநிதிக்கு, இந்திய கிரிக்கெட் வீரர்கள் மற்றும் விளையாட்டு நட்சத்திர வீரர்கள் டுவிட்டர் மூலம் இரங்கல் தெரிவித்துள்ளனர். வீரர்களின் இரங்கல் வருமாறு:-

ஆர்.அஸ்வின் (சுழற்பந்து வீச்சாளர்): கலைஞரின் மறைவு செய்தி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆன்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்.

ஹர்பஜன்சிங் (சுழற்பந்து வீச்சாளர்): சூரியன் முழுமையாக அஸ்தமித்து விட்டது. தமிழ் தன்னுடைய முடிவுரையை எழுதியது. ஒப்பாரும், மிக்காரும் இல்லா தலைவா உங்களுடைய இழப்பு காலத்தால் ஈடுசெய்ய முடியாதது. இனி எப்படி கேட்பேன் அந்த காந்த குரலை. முத்தமிழின் மூத்த மகனுக்கு எனது வீர வணக்கம்.

முரளி விஜய் (தொடக்க ஆட்டக்காரர்): தனது வாழ்நாள் முழுவதும் மக்களின் முன்னேற்றத்துக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட சிறந்த தலைவர். அவரது மறைவு பேரிழப்பாகும்.

விஸ்வநாதன் ஆனந்த் (முன்னாள் உலக செஸ் சாம்பியன்): தமிழகத்தின் சிறந்த அரசியல் தலைவர்களில் ஒருவரான கருணாநிதியின் மறைவு செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். அவரை நான் சிலமுறை சந்தித்து பேசி மகிழ்ந்து இருக்கிறேன். முதல்முறையாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற போது அவர் என்னை பாராட்டியதோடு ஒரு செஸ் போர்டை வழங்கினார். அது மறக்க முடியாத பரிசாகும். அவர் விளையாட்டின் புரவலர். அவரது பேச்சாற்றல் என்னை மிகவும் கவர்ந்ததாகும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இதே போல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் ஷேவாக், முன்னாள் பேட்ஸ்மேன்கள் வி.வி.எஸ். லட்சுமண், முகமது கைப் மற்றும் சுரேஷ் ரெய்னா, வாஷிங்டன் சுந்தர் உள்பட பலரும் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்