இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்குமா இந்திய அணி? - 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டனில் இன்று துவங்க உள்ளது.

Update: 2018-08-08 23:30 GMT
லண்டன்,

இந்தியா-இங்கிலாந்து மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்சில் இன்று தொடங்குகிறது. முந்தைய தோல்விக்கு இந்திய அணி பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. பர்மிங்காமில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் கடந்த சில தினங்களாக தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

முதலாவது டெஸ்டில் இந்திய அணி வெற்றியை நெருங்கி வந்து கோட்டை விட்டது. 2-வது இன்னிங்சில் 194 ரன்கள் இலக்கை கூட எட்ட முடியாமல் 162 ரன்களில் சுருண்டது. இந்திய கேப்டன் விராட் கோலியை (149 ரன், 51 ரன்) தவிர மற்ற பேட்ஸ்மேன்கள் இங்கிலாந்தின் ‘ஸ்விங்’ தாக்குதலை சமாளிக்க முடியாமல் ‘சரண்’ அடைந்தனர். கோலியை தவிர்த்து, இன்னொரு இந்திய வீரர் ஜொலித்து இருந்தால் அதில் வெற்றி கண்டு புதிய வரலாறு படைத்திருக்க முடியும்.

தோல்வி எதிரொலியாக இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்படும் என்று தெரிகிறது. கடந்த ஆட்டத்தில் அனுபவ பேட்ஸ்மேன் புஜாராவை வெளியே உட்கார வைத்தது விமர்சனத்தை கிளப்பியது. இதனால் இன்றைய டெஸ்டில் அவர் சேர்க்கப்படலாம். அவர் அணிக்கு திரும்பினால் லோகேஷ் ராகுல் அல்லது ஷிகர் தவான் ஆகியோரில் ஒருவருக்கு கல்தா கொடுக்கப்படும்.

வானிலையை பொறுத்தவரை லண்டனில் தற்போது வெயில் கொளுத்துகிறது. இதே சீதோஷ்ண நிலை நீடித்தால் ஆடுகளம் உலர்ந்து, பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சு எடுபடும். இதனால் இந்திய அணி 2-வது சுழற்பந்து வீச்சாளராக இடக்கை சுழல் சூறாவளி குல்தீப் யாதவை தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. இரண்டு சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆட வாய்ப்பு இருப்பதை இந்திய கேப்டன் கோலியும் நேற்று பேட்டியின் போது உறுதிப்படுத்தினார்.

பர்மிங்காம் டெஸ்டில் பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை கச்சிதமாக செய்து முடித்தனர். ஆனால் பேட்ஸ்மேன்கள் தான் சொதப்பி விட்டனர். இதனால் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து அவசரம் காட்டாமல் ஆடுகளத்தன்மைக்கு ஏற்ப ஆட வேண்டியது அவசியமாகும். கணிசமான ஸ்கோரை குவித்து விட்டால் நிச்சயம் இங்கிலாந்துக்கு பதிலடி கொடுக்க முடியும்.

முதலாவது டெஸ்டில் கிடைத்த வெற்றியால் உற்சாகத்தில் உள்ள இங்கிலாந்து வீரர்கள் அதே உத்வேகத்துடன் வரிந்து கட்டுவதற்கு தயாராக உள்ளனர். இரவு விடுதியில் வாலிபரை தாக்கிய வழக்கு விசாரணைக்கு ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ஆஜராகி வருவதால் அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் அல்லது மொயீன் அலி ஆகியோரில் ஒருவர் இடம் பெறுவர். இதே போல் பார்மில் இல்லாத டேவிட் மலான் நீக்கப்பட்டு புதுமுக பேட்ஸ்மேன் ஆலிவர் போப் இடம் பிடித்துள்ளார். 20 வயதான ஆலிவர் போப், கவுண்டி போட்டியில் ரன்மழை பொழிந்ததன் மூலம் முதல்முறையாக தேசிய அணிக்குள் நுழைந்துள்ளார்.

முதலாவது டெஸ்டில் 20 வயதான ஆல்-ரவுண்டர் சாம் குர்ரன் அரைசதத்துடன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவரை போன்று ஆலிவர் போப்பும் தாக்கத்தை ஏற்படுத்துவாரா? என்று அந்த நாட்டு ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் நிருபர்களிடம் கூறுகையில், ‘முதலாவது டெஸ்டில் எங்களது முழு திறமை வெளியாகவில்லை. என்றாலும் வெற்றி பெற்றது மிகப்பெரிய நம்பிக்கையை தந்துள்ளது. லார்ட்சில் ஒவ்வொரு முறை களம் இறங்கும் போதும் ஆடுகளத்தன்மை வித்தியாசமாகவே இருக்கிறது. அதனால் நாளை (இன்று) ஆடுகளத்தன்மை எந்த மாதிரி இருக்கிறது என்பதை பார்த்த பிறகே கூடுதலாக ஒரு சுழற்பந்து வீச்சாளரை சேர்ப்பதா? வேண்டாமா? என்பதை முடிவு செய்வோம்’ என்றார்.

லார்ட்ஸ் ஆடுகளத்தில் ஓரளவு புற்கள் காணப்படுகிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டுக்கும் சரிசமமான ஒத்துழைப்பு கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலில் பேட் செய்யும் அணிக்கே அனுகூலம் அதிகமாகும். அதனால் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும்.

இங்கு இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 9 டெஸ்டில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இங்கிலாந்து: அலஸ்டயர் குக், கீடான் ஜென்னிங்ஸ், ஆலிவர் போப், ஜோ ரூட் (கேப்டன்), ஜானி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் குர்ரன், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், கிறிஸ் வோக்ஸ் அல்லது மொயீன் அலி, அடில் ரஷித்.

இந்தியா: முரளிவிஜய், ஷிகர் தவான் அல்லது லோகேஷ் ராகுல், புஜாரா, விராட் கோலி (கேப்டன்), ரஹானே, தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா அல்லது குல்தீப் யாதவ் அல்லது ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ்.

இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை சோனி சிக்ஸ், சோனி டென்3 சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

மேலும் செய்திகள்