ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு முறை: லோதா பரிந்துரையை நீக்கியது சுப்ரீம் கோர்ட்

லோதா குழுவின் முக்கியப் பரிந்துரையான ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு முறை என்கிற அம்சம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. #BCCI

Update: 2018-08-09 12:27 GMT
புதுடெல்லி

ஐபிஎல் மேச்ட்  பிக்ஸிங் வழக்கின் ஒரு பகுதியாக பிசிசிஐயை மறுசீரமைப்பு செய்வதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழுவை அமைத்தது சுப்ரீம் கோர்ட்.  அதைத் தொடர்ந்து லோதா குழு அளித்த பரிந்துரைகளை அப்படியே ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட் , அதை உடனடியாக அமல்படுத்துமாறு பிசிசிஐக்கு உத்தரவிட்டது. 

லோதா குழு பரிந்துரைகளில் பலவற்றுக்கு பிசிசிஐ அதிகாரிகள் மற்றும் மாநில கிரிக்கெட் சங்கங்கள் பல எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இதுகுறித்த வழக்கின் விசாரணை மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு சுப்ரீம் கோர்ட்டில்  இன்று நடைபெற்றது.

ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு முறை, பிசிசிஐ நிர்வாகிகளின் பதவிகளுக்கு ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கும் இடையே இளைப்பாறல் காலம் போன்ற முக்கியமான விஷயங்களில் திருத்தங்கள் கொண்டுவந்துள்ளது சுப்ரீம் கோர்ட். 

அதன்படி லோதா குழுவின் முக்கியப் பரிந்துரையான ஒரு மாநிலத்துக்கு ஒரு வாக்கு முறை என்கிற அம்சம் தற்போது நீக்கப்பட்டுள்ளது. குஜராத்தைச் சேர்ந்த சவுராஷ்டிரா, வதோதரா மற்றும் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மும்பை, விதர்பா ஆகிய அணிகளுக்கு முழு உறுப்பினர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளன. ரயில்வே, சர்வீசஸ், பல்கலைக்கழகங்களின் சங்கம் போன்றவை தங்களுடைய முழு உறுப்பினர் பதவிகளைத் தக்கவைத்துக்கொண்டுள்ளன.

ஒரே பதவியில் மீண்டும் போட்டியிடும்போதுதான் இளைப்பாறல் காலம் தேவைப்படுகிறது. அதே நபர், வேறு பதவிக்குப் போட்டியிட்டால் இளைப்பாறல் காலம் தேவையில்லை. தொடர்ந்து இரு பதவிகளுக்குப் போட்டியிடலாம் என்று  நீதிமன்றம் கூறியுள்ளது.

நான்கு வாரங்களுக்குள் இந்தத் திருத்தங்களைக் கொண்ட சட்ட வரைவைப் பதிவு செய்யும்படியும் பிசிசிஐக்கு ஆணையிடப்பட்டுள்ளது. பிசிசிஐ சட்டவிதிகளை 30 நாள்களுக்குள் மாநில சங்கங்கள் அமல்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டு உள்ளது.

மேலும் செய்திகள்