லண்டன் டெஸ்டில் 2-வது நாள் ஆட்டமும் மழையால் பாதிப்பு: இந்திய அணி 107 ரன்னில் சுருண்டது

இங்கிலாந்துக்கு எதிராக லண்டனில் தொடங்கிய 2-வது டெஸ்ட் போட்டியில் மழை பாதிப்புக்கு இடையே பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 107 ரன்னில் சுருண்டது.

Update: 2018-08-10 23:15 GMT
லண்டன்,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நேற்று முன்தினம் தொடங்குவதாக இருந்தது. பலத்த மழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. இந்திய அணியில் இரு மாற்றமாக ஷிகர் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா மற்றும் 2-வது சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் டேவிட் மலான், பென் ஸ்டோக்ஸ் ஆகியோருக்கு பதிலாக ஆலிவர் போப், ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் இடம் பிடித்தனர். 20 வயதான ஆலிவர் போப்புக்கு இது தான் முதல் சர்வதேச போட்டியாகும்.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட், ஈரப்பதமான ஆடுகளம் மற்றும் மேகமூட்டமான வானிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து இந்திய அணியின் இன்னிங்சை முரளிவிஜயும், லோகேஷ் ராகுலும் தொடங்கினர். எதிர்பார்த்தது போலவே, ஆடுகளத்தில் வேகப்பந்து வீச்சு எடுபட்டது.

தொடக்க ஓவரில் முதல் 4 பந்துகளை அவுட்-ஸ்விங்காக வீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன் திடீரென ஒரு பந்தை ஸ்டம்புக்குள் வீசி விஜயை (0) காலி செய்தார். ஆண்டர்சனும், ஸ்டூவர்ட் பிராட்டும் பந்தை நன்கு ஸ்விங் செய்து குடைச்சல் கொடுத்தனர். இந்த முறையும் சொதப்பிய லோகேஷ் ராகுல் (8 ரன், 14 பந்து, 2 பவுண்டரி) ஆண்டர்சனின் பவுலிங்கில் விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவிடம் கேட்ச் ஆனார்.

இதன் பின்னர் புஜாராவும், கேப்டன் விராட் கோலியும் கைகோர்த்தனர். 6.3 ஓவர்களில் இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 11 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது. மழை நீடித்ததால் முன்கூட்டியே உணவு இடைவேளை விடப்பட்டது.

அதன் பிறகு ஆட்டம் தொடங்கிய போது, கோலியின் தவறால் புஜாரா விக்கெட்டை இழக்க நேரிட்டது. ஆண்டர்சனின் பந்து வீச்சில் பந்தை அருகில் தட்டிவிட்ட புஜாரா, எதிர்முனையில் நின்ற கோலி அழைத்ததின் பேரின் வேகமாக ஓடினார். ஆனால் சில அடி தூரம் ஓடிய கோலி வேண்டாம் என்று திரும்பிவிட்டார். அதற்குள் எதிர்முனையை நெருங்கிய புஜாராவினால் மறுபக்கம் உடனடியாக திரும்ப முடியவில்லை. அதற்குள் பந்தை பீல்டிங் செய்த இங்கிலாந்து வீரர் போப் எளிதில் ரன்-அவுட் ஆக்கினார். இதனால் புஜாரா (1 ரன், 25 பந்து) மிகுந்த ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

அத்துடன் மறுபடியும் மழை கொட்டியது. அச்சமயம் இந்திய அணி 8.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 15 ரன்களுடன் ஊசலாடியது. அதன் பிறகு மழை ஓய்ந்து தேனீர் இடைவேளைக்கு பிறகு ஆட்டம் தொடங்கியது.

கோலியுடன், துணை கேப்டன் ரஹானே நுழைந்தார். களத்தில் பந்து தாறுமாறாக ‘ஸ்விங்’ ஆனதால் சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திண்டாடினர். பந்து எந்த மாதிரி திரும்புகிறது என்பதை நமது வீரர்களால் துல்லியமாக கணிக்க இயலவில்லை. இதனால் பந்து, பேட்டின் விளிம்பில் பட்டு ‘ஸ்லிப்’ பகுதிக்குள் சீறி பாய்ந்ததை அடிக்கடி பார்க்க முடிந்தது. கேப்டன் விராட் கோலி 24 ரன்களில் (57 பந்து, 2 பவுண்டரி), கிறிஸ் வோக்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பட்லரிடம் சிக்கினார்.

அடுத்து இறங்கிய ஹர்திக் பாண்ட்யாவும் (11 ரன்) இதே போல் கேட்ச் ஆனார். முந்தைய பந்தில் கேட்ச் கண்டத்தில் இருந்து தப்பித்த பாண்ட்யா, அந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறினார். அவரைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக்கும் (1 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. 7-வது விக்கெட்டுக்கு களம் புகுந்த அஸ்வின் சிறிது நேரம் ஈடுகொடுத்து ஆடியதுடன் சில பவுண்டரிகளும் ஓடவிட்டார். இதற்கிடையே ரஹானே 18 ரன்களில் (44 பந்து) அடங்கினார். தொடர்ந்து குல்தீப் யாதவ் (0), அஸ்வின் (29 ரன், 38 பந்து, 4 பவுண்டரி), இஷாந்த் ஷர்மா (0) வரிசையாக பெவிலியன் திரும்பினர்.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 35.2 ஓவர்களில் 107 ரன்களில் சுருண்டது. முகமது ஷமி 10 ரன்னுடன் களத்தில் இருந்தார். லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 39 ஆண்டுகளில் இந்திய அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். இங்கிலாந்து தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டும், ஸ்டூவர்ட் பிராட், சாம் குர்ரன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். லார்ட்ஸ் மைதானத்தில் ஆண்டர்சனின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 99 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

3-வது நாளான இன்று இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை ஆடும்.

சுவாரஸ்யமான துளிகள்

* இங்கிலாந்து தொடக்க வீரர் அலஸ்டயர் குக், லண்டன் லார்ட்சில் கால்பதிக்கும் 26-வது டெஸ்ட் இதுவாகும். குறிப்பிட்ட மைதானத்தில் அதிக டெஸ்டுகளில் ஆடியவர்களின் பட்டியலில் குக் 2-வது இடத்தில் இருக்கிறார். இந்த வரிசையில் முதலிடத்தில் உள்ள இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே கொழும்பு எஸ்.எஸ்.சி. ஸ்டேடியத்தில் 27 டெஸ்டுகளில் ஆடியிருக்கிறார்.

* இந்திய அணியின் கடைசி 13 ரன்-அவுட்டுகளை எடுத்துக் கொண்டால், அதில் 8 நிகழ்வுகளில் புஜாரா (ரன்-அவுட் ஆகியோ அல்லது மறுமுனையில் நின்றோ) இருந்திருக்கிறார். ஒட்டுமொத்தத்தில் புஜாரா டெஸ்டில் ரன்-அவுட் ஆவது இது 7-வது முறையாகும்.

* இந்த டெஸ்டில் இங்கிலாந்து அணியில் 20 வயதான ஆலிவர் போப் புதுமுக வீரராக இடம் பிடித்தார். இங்கிலாந்து அணியில் இந்த ஆண்டில் மாசன் கிரேன் (வயது 20 ஆண்டு 320 நாள்), டாம் பெஸ் (20 ஆண்டு 306 நாள்), சாம் குர்ரன் (19 ஆண்டு 363 நாள்), ஆலிவர் போப் (20 ஆண்டு 220 நாள்) ஆகியோர் டெஸ்டில் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். கடந்த 140 ஆண்டுகளில் இங்கிலாந்து அணி ஒரே ஆண்டில் 21 வயதுக்குட்பட்ட வீரர்களை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களை டெஸ்டில் அறிமுகம் செய்தது கிடையாது. இந்த சீசனில் தான் இளம் வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் செய்திகள்