கிரிக்கெட்
2-வது டெஸ்ட்: இங்கிலாந்து 396 ரன்களில் டிக்ளெர், 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறல்

இந்திய அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் எடுத்து டிக்ளெர் செய்தது. பின்னர் ஆடிய இந்திய அணி தொடக்கத்திலேயே 2 விக்கெட்டுகளை இழந்து திணறி வருகிறது. #IndVsEng
லண்டன், 

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் நாள் ஆட்டம் மழையால் ரத்தானது. 2-வது நாள் ஆட்டமும் மழையால் கணிசமாக பாதிக்கப்பட்டது. இதற்கு மத்தியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, எதிரணியின் ‘ஸ்விங்’ தாக்குதலை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்து போனது.

35.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இந்திய அணி முதல் இன்னிங்சில் வெறும் 107 ரன்னில் சுருண்டது. லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த 100 ஆண்டுகளில் மிக குறைந்த ஓவர்களில் முடிந்த முதல் இன்னிங்சில் இது 2-வது இடம் பெற்றுள்ளது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை அள்ளினார். அத்துடன் 2-வது நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. காலையில் வெயில் அடித்ததால், ஆடுகளத்தில் ஈரப்பதத்தின் தன்மை சற்று குறைந்தது. இதனால் ஓரளவு பேட்டிங்குக்கு உகந்த சூழல் உருவானது.

இங்கிலாந்தின் இன்னிங்சை அலஸ்டயர் குக்கும், கீடான் ஜென்னிங்சும் தொடங்கினர். முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் (7.3 ஓவர்) சேர்த்த இவர்களை வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி பிரித்தார். அவரது பந்தில் ஜென்னிங்ஸ் (11 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். தொடர்ந்து அலஸ்டயர் குக் (21 ரன்), அறிமுக வீரர் ஆலிவர் போப் (28 ரன்), கேப்டன் ஜோ ரூட் (19 ரன்), ஜோஸ் பட்லர் (24 ரன்) சீரான இடைவெளியில் வெளியேறினர். அப்போது இங்கிலாந்து 5 விக்கெட்டுக்கு 131 ரன்களுடன் தடுமாற்றத்திற்குள்ளானது.

இதையடுத்து 6-வது விக்கெட்டுக்கு கைகோர்த்த விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோவும், ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்சும் வேகப்பந்து வீச்சை மிக கவனமுடன் எதிர்கொண்டு விளையாடியதுடன், அணியை சரிவில் இருந்து படிப்படியாக நிமிர வைத்தனர். ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சு சுத்தமாக எடுபடவில்லை. அவர்கள், சுழற்பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ், அஸ்வின் இருவரது பந்துவீச்சிலும் சிரமமின்றி ரன்களை திரட்டினர். போக போக நமது வேகப்பந்து வீச்சாளர்களாலும் தாக்கத்தை ஏற்படுத்த இயலவில்லை.

இருவரும் நிலைத்து நின்று ஆடிய விதத்தை பார்த்து ஒரு கட்டத்தில் இந்திய வீரர்கள் சோர்ந்து போனார்கள். ஏதோ கடமைக்கு பந்து வீசியது போன்று இருந்தது.

இந்திய பந்துவீச்சை வெளுத்து வாங்கிய கிறிஸ் வோக்ஸ் 129 பந்துகளில் தனது முதலாவது சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் சதத்தை நெருங்கிய பேர்ஸ்டோ, அணியின் ஸ்கோர் 320 ரன்களை எட்டிய போது, ஹர்திக் பாண்ட்யாவின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார். பேர்ஸ்டோ 93 ரன்களில் (144 பந்து, 12 பவுண்டரி) வெளியேறினார்.

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 81 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 357 ரன்கள் குவித்து இருந்த போது போதிய வெளிச்சம் இன்மையால் அத்துடன் 3-வது நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. 

இந்நிலையில் இன்று 4-ம் நாள் ஆட்டம் தொடங்கப்பட்டது. ஆட்டம் தொடங்கிய முதலே நிதான ஆட்டத்தை வெளிபடுத்தி வந்த இங்கிலாந்து அணி 396 ரன்களில் 7வது விக்கெட்டை பறிகொடுத்தது. சாம் குர்ரன் 40 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் அவுட் ஆனார். இந்நிலையில் இங்கிலாந்து அணி 289 ரன்கள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் டிக்ளெர் செய்தது. கிறிஸ் வோக்ஸ் 137 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன் பின்னர் 2-வது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணிக்கு தொடக்கம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. துவக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் கேட்ச் ஆகி வெளியேறினார். சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுலும் பெவிலியன் திரும்ப, 13 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி திணறி வருகிறது.