கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி

இலங்கைக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட்போட்டியில் தென்ஆப்பிரிக்க அணி படுதோல்வி அடைந்தது.
கொழும்பு,

இலங்கை - தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 8 விக்கெட் இழப்புக்கு 299 ரன்கள் குவித்தது. கேப்டன் மேத்யூஸ் 97 ரன்கள் (97 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

அடுத்து களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க அணி, இலங்கையின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 24.4 ஓவர்களில் 121 ரன்களில் சுருண்டது. இலங்கைக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணியின் குறைந்த ஸ்கோர் இதுவாகும். அந்த அணியில் பொறுப்பு கேப்டன் குயின்டான் டி காக் (54 ரன்) தவிர மற்றவர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இலங்கை சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 29 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். அவரது சிறந்த பந்து வீச்சு இதுவாகும்.

இதன் மூலம் இலங்கை அணி 178 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தாலும், அது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் தொடரை தென்ஆப்பிரிக்கா 3-2 என்ற கணக்கில் ஏற்கனவே கைப்பற்றி விட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி கொழும்பில் நாளை நடக்கிறது.