டி.என்.பி.எல். கிரிக்கெட்: திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி ‘சாம்பியன்’

டி.என்.பி.எல். கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்சை வீழ்த்தி மதுரை பாந்தர்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Update: 2018-08-12 23:30 GMT
சென்னை,

8 அணிகள் பங்கேற்ற 3-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு ‘கிளைமாக்ஸ்’ அரங்கேறியது. மகுடத்துக்கான இறுதி ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ்- மதுரை பாந்தர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் மல்லுகட்டின.

‘டாஸ்’ ஜெயித்த மதுரை கேப்டன் டி.ரோகித் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட்டிங் செய்த திண்டுக்கல் அணி, மதுரை வேகப்பந்து வீச்சாளர்கள் அபிஷேக் தன்வார், லோகேஷ் ராஜ் ஆகியோரின் துடிப்புமிக்க பந்து வீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் திண்டாடியது. ஹரி நிஷாந்த் (1 ரன்), அனிருத் (4 ரன்), சதுர்வேத் (9 ரன்), வருண் தோதாத்ரி (0), மோகன் அபினவ் (1 ரன்) ஆகியோர் வரிசையாக ‘விக்கெட் அணிவகுப்பு’ நடத்த திண்டுக்கல் அணி 21 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை பறிகொடுத்து ஊசலாடியது. மறுபக்கம் மற்றொரு தொடக்க வீரரும், கேப்டனுமான ஜெகதீசன் மட்டும் போராடினார். அதிரடி வீரர் விவேக் (13 ரன்) இரண்டு முறை எளிதான கேட்ச் வாய்ப்பில் இருந்து தப்பித்த போதிலும், அந்த ‘ஜாக்பாட்’டை பயன்படுத்திக் கொள்ள தவறினார்.

தொடர்ந்து விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இக்கட்டமான நிலைமைக்கு மத்தியில் சமாளித்து ஆடிய கேப்டன் ஜெகதீசன் அரைசதம் அடித்து (51 ரன், 44 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஒரு வழியாக அணியின் ஸ்கோரை 100 ரன்களை கடக்க வைத்தார். அதைத் தொடர்ந்து கடைசி ஓவரில் முகமது (17 ரன்) இரண்டு சிக்சர் விரட்டியது அந்த அணிக்கு கொஞ்சம் ஆறுதல் அளித்தது.

முடிவில் திண்டுக்கல் அணி 19.5 ஓவர்களில் 117 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்த சீசனில் திண்டுக்கல் அணியின் மோசமான ஸ்கோர் இதுவாகும். மதுரை தரப்பில் அபிஷேக் தன்வார் 4 விக்கெட்டுகளும், லோகேஷ் ராஜ் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவதி 2 விக்கெட்டுகளும் சாய்த்தனர். இரண்டு மெய்டன் ஓவர்கள் வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பின்னர் எளிய இலக்கை நோக்கி களம் இறங்கிய மதுரை அணிக்கு ஆரம்பத்திலேயே பேரிடி விழுந்தது. சுழற்பந்து வீச்சாளர் சிலம்பரசன் முதல் ஓவரிலேயே, மதுரை பேட்ஸ்மேன்கள் தலைவன் சற்குணம் (0), துஷார் ரஹெஜா (0) கேப்டன் ரோகித் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை அறுவடை செய்தார்.

இதன் பின்னர் 4-வது விக்கெட்டுக்கு அருண் கார்த்திக்கும், ஷிஜித் சந்திரனும் இணைந்து அணியை காப்பாற்றினர். குறைவான இலக்கு என்பதால் இருவரும் அவசரம் காட்டாமல் ஆடினர். சரிவில் இருந்து மீண்ட பிறகு அருண் கார்த்திக், அவ்வப்போது பந்தை எல்லைக்கோட்டிற்கு ஓடவிட்டு ரசிகர்களை பரவசப்படுத்தினார். இந்த கூட்டணியை கடைசி வரை திண்டுக்கல் பவுலர்களால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

மதுரை அணி 17.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக பட்டத்தை வசப்படுத்தியது. அருண் கார்த்திக் 75 ரன்களுடனும் (50 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), ஷிஜித் சந்திரன் 38 ரன்களுடனும் (49 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) களத்தில் இருந்தனர்.

முதல் 2 ஆண்டுகளில் எந்த ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாமல் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்ட மதுரை அணி, இந்த சீசனில் புதிய நிர்வாகத்தின் கீழ் ஆச்சரியப்படத்தக்க வகையில் எழுச்சி பெற்று இருக்கிறது. திண்டுக்கல் அணிக்கு எதிராக முந்தைய 4 மோதல்களிலும் தோற்று இருந்த மதுரை அணி அதற்கு எல்லாம் சேர்த்து வட்டியும் முதலுமாக பதிலடி கொடுத்திருக்கிறது.

வாகை சூடிய மதுரை அணிக்கு ரூ.1 கோடியும், 2-வது இடம் பிடித்த திண்டுக்கல் அணிக்கு ரூ.60 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

அருண் கார்த்திக் சாதனை

மதுரை அணியின் ஆணிவேரான தொடக்க ஆட்டக்காரர் அருண் கார்த்திக் 10 ஆட்டங்களில் விளையாடி 6 அரைசதம் உள்பட 472 ரன்கள் குவித்து முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் ஒரு சீசனில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை வசப்படுத்தினார்.

இந்த ஆண்டில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரரும் மதுரை அணியை சேர்ந்தவர் தான். வேகப்பந்து வீச்சாளர் அபிஷேக் தன்வார் 15 விக்கெட்டுகள் (10 ஆட்டம்) வீழ்த்தி இருக்கிறார். இந்த வரிசையில் 2-வது இடத்தில் தூத்துக்குடி அணியின் பவுலர் அதிசயராஜ் டேவிட்சன் (13 விக்கெட்) உள்ளார்.

மேலும் செய்திகள்