கிரிக்கெட்
இரவு விடுதியில் மோதல் விவகாரம்: இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் விடுவிப்பு

இரவு விடுதியில் மோதல் விவகாரத்தில் இங்கிலாந்து வீரர் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டு அணிக்கு திரும்பினார்.
பிரிஸ்டல்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ந்தேதி பிரிஸ்டல் நகரில் தங்கள் அணியின் வெற்றி கொண்டாட்டத்திற்காக இரவு விடுதிக்கு சென்ற போது சில இளைஞர்களுடன் மோதல் ஏற்பட்டது. அவர் விட்ட குத்துகளில் ரையான் அலி என்ற வாலிபர் கண்ணில் காயமடைந்து, மயங்கி விழுந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பென் ஸ்டோக்சை கைது செய்து பின்னர் ஜாமீனில் விடுவித்தனர்.

இது தொடர்பான வழக்கு பிரிஸ்டல் கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கு விசாரணைக்காக இரண்டு தரப்பினரும் ஆஜரானார்கள். குறுக்கு விசாரணையின் போது பென் ஸ்டோக்ஸ், ‘நான் வேண்டுமென்றே யாரையும் தாக்கவில்லை. என்னை தாக்கியவர்களிடம் இருந்து தற்காத்து கொள்ளவே திருப்பி அடித்தேன். அவர்களில் ஒருவர் கையில் பாட்டில் வைத்திருந்தார்’ என்று கூறினார். இது தொடர்பான வீடியோ ஆதாரங்களும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த நிலையில் பென் ஸ்டோக்சின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கில் இருந்து அவரை விடுதலை செய்து உத்தரவிட்டனர். சர்ச்சையில் இருந்து விடுவிக்கப்பட்டதையடுத்து 27 வயதான பென் ஸ்டோக்ஸ் உடனடியாக இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டார்.

முந்தைய டெஸ்டில் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டதால், அவரது இடத்தில் களம் கண்ட ஆல்-ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் சதம் விளாசி ஆட்டநாயகன் விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.