“இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்” - ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள்

இந்திய அணியினர் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள் என ரசிகர்களுக்கு கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2018-08-14 23:30 GMT
லண்டன்,

இங்கிலாந்துடன் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்துள்ள நிலையில், ‘எங்கள் மீதான நம்பிக்கையை இழந்து விடாதீர்கள்’ என்று ரசிகர்களுக்கு இந்திய அணியின் கேப்டன் கோலி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி முதல் இரு டெஸ்டுகளிலும் தோல்வி அடைந்தது. இதில் லண்டன் லார்ட்சில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இரு இன்னிங்சில் முறையே 107, 130 ரன்கள் மட்டுமே எடுத்து எந்த வித போராட்டமும் இன்றி பணிந்தது. இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வி அடைந்த அந்த டெஸ்டில் இந்திய வீரர்களின் செயல்பாடு முன்னாள் வீரர்கள் மூலம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. ‘நம்பர் ஒன்’ அணியான நமது வீரர்கள் ஆடிய விதத்தை கண்டு ரசிகர்களும் கொதித்து போய் இருக்கிறார்கள்.

மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் கூறுகையில், ‘லார்ட்ஸ் ஆடுகளத்தில் நிறைய புற்கள் இருந்தது. அது மட்டுமின்றி மேகமூட்டமான சீதோஷ்ண நிலை காணப்பட்டது. ஆனால் இத்தகைய சூழலில் இந்திய அணி நிர்வாகம் 2 சுழற்பந்து வீச்சாளர்களுடன் ஆடும் முடிவு எடுத்தது. உண்மையில் இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் அவசியம் தானா? 2-வது சுழற்பந்து வீச்சாளருக்கு பதிலாக இன்னொரு வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டு இருந்தால், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 160 முதல் 170 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியிருக்கும்’ என்றார்.

மேலும் ஆடும் லெவன் அணியை கேப்டன் கோலி அடிக்கடி மாற்றம் செய்வதையும் ஹர்பஜன்சிங் சாடினார். ‘வெளிநாட்டு தொடர்களில், தொடக்க ஜோடி நல்ல பார்ட்னர்ஷிப் கொடுத்தால், அது வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும், நமது ஜோடியில் மாற்றங்கள் செய்கிறார்கள். அது போல் ஒவ்வொரு டெஸ்டிலும் ஆடும் லெவனிலும் மாற்றம் செய்கிறார்கள். இதனால் மிடில் வரிசை கூட சரியாக அமையாமல் போய் விடுகிறது’ என்றும் ஹர்பஜன்சிங் கூறினார்.

இந்த நிலையில், விமர்சனங்களுக்கு இடையே இந்திய கேப்டன் விராட் கோலி தனது ‘பேஸ்புக்’ பக்கத்தின் மூலம் ரசிகர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், ‘போட்டிகளில் சில நேரம் ஜெயிக்கிறோம். சில சமயம் தோற்று அதில் இருந்து பாடம் கற்கிறோம். இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ந்து இரு டெஸ்டுகளில் தோல்வி அடைந்ததற்காக, நீங்கள் (ரசிகர்கள்) எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையை ஒரு போதும் இழந்து விடாதீர்கள். நாங்களும் உங்கள் மீது கொண்டுள்ள நம்பிக்கையை எப்போதும் இழக்கமாட்டோம் என்று உறுதி அளிக்கிறோம். சரியான பாதையில் பயணித்து முன்னேற்றம் காண்போம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் வருகிற 18-ந்தேதி தொடங்குகிறது. இங்கு இந்திய அணி இதுவரை 6 டெஸ்டுகளில் விளையாடி அதில் ஒன்றில் வெற்றியும், 2-ல் தோல்வியும், 3-ல் டிராவும் கண்டுள்ளது. அந்த வெற்றி 2007-ம் ஆண்டு ராகுல் டிராவிட் தலைமையில் கிடைத்தது.

மேலும் செய்திகள்